செங்கல்பட்டில் பன்னாட்டு மாநாடு மையம்: முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
1 min read
Chief Minister lays foundation stone for Rs. 525 crore International Convention Center in Chengalpattu
29.5.2025
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.5.2025) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் 37.99 ஏக்கர் நிலப்பரப்பில் 525 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
- அத்துடன், வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் “உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை” திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரம், மாணிக்கமங்கலம் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.
- அதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், நாமக்கல் மாவட்டத்தில் 424 கோடியே 38 இலட்சம் ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட மல்லியக்கரை – இராசிபுரம் – திருச்செங்கோடு – ஈரோடு சாலை, மதுரை மாவட்டம், பழங்காநத்தத்தில் இரயில்வே கடவிற்கு மாற்றாக 68 கோடியே 38 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டம், மேல்பாக்கத்தில் 6 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினருக்கான மறுகுடியமர்வு குடியிருப்புகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
- மேலும், 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுள் 9 மாணவ, மாணவியர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்தினார்
- அதன் பின்னர், மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் நிர்வாக சீர்திருத்த முன்னெடுப்பின் மூலமாக “எளிமை ஆளுமை” திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் சுகாதார சான்றிதழ், பொது கட்டிட உரிமம், முதியோர் இல்லங்கள் உரிமம், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் உரிமம், மகளிர் இல்லங்கள் உரிமம், சொத்து மதிப்பு சான்றிதழ், வெள்ளை வகை தொழிற்சாலைகள் பட்டியல், புன்செய் நிலங்களை விவசாயம் அல்லாத செயல்பாட்டிற்கு பயன்படுத்த தடையின்மை சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ், அரசாங்க ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மை சான்றிதழ் ஆகிய பத்து சேவைகளின் நடைமுறைகளை எளிமையாக்கி மக்கள் பயன்பாட்டிற்காக இணையவழி சேவையை தொடங்கி வைத்தார்.