பிளஸ்-2 தேர்வில் மகன் குறைவாக மதிப்பெண்- பெண் டாக்டர் தற்கொலை
1 min read
Female doctor commits suicide after son scores low in Plus 2 exam
29.5.2025
வேலூர் காட்பாடி கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் காமேஷ். இவருடைய மனைவி சுமித்ரா (வயது 44). பல் டாக்டர்களான இருவரும் காந்திநகரில் பல் கிளினிக் நடத்தி வருகின்றனர். இவர்களின் மகன் தனகார்த்திக்(17) பிளஸ்-2 பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
டாக்டர் தம்பதியினர் தங்களை போன்று மகனையும் டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தனர். ஆனால் அவன் எதிர்பார்த்ததைவிட தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுதொடர்பாக சுமித்ராவிற்கும், அவரது மகனுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி சுமித்ரா பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்தது தொடர்பாக மீண்டும் மகனை சத்தம் போட்டதாகவும், அதனால் அவன் நேற்று முன்தினம் எதுவும் சாப்பிடாமலும், யாரிடமும் பேசாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் சுமித்ரா மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி மற்றும் மகன் ஆகியோர் வழக்கம் போல் தூங்க சென்றனர். நேற்று காலை காமேஷ் எழுந்து பார்த்த போது சுமித்ராவை வீட்டில் காணவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் பின்பகுதிக்கு சென்று பார்த்தார். அங்குள்ள மேற்கூரை இரும்பு கம்பியில் சுமித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவரது உடலை பார்த்து கதறி அழுதார்.
தகவலின்பேரில் விருதம்பட்டு போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.