July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

பத்திரப்பதிவு விதிகளில் மாற்றம் வருகிறது

1 min read

There is a change in the deed registration rules.

29.5.2025
பத்திரப்பதிவு சட்டத்துக்கு மாற்றாக, மத்திய அரசு புதிய வரைவு மசோதாவை உருவாக்கி உள்ளது. மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள நில வளத்துறை தயாரித்துள்ள இந்த மசோதா, பொதுமக்களின் கருத்துகேட்புக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்போது, பத்திரப்பதிவு செய்பவர்களின் அடையாளத்தை சரிபார்க்க ஆதார் எண் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வரைவு மசோதாவில், ஆதார் எண் கட்டாயம் அல்ல என்று கூறப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுக்கு வருபவரின் விருப்பத்தின்பேரில், ஆதார் எண்ணை பயன்படுத்தி சரிபார்க்கலாம்.
ஆதார் எண் இல்லாதவர்கள் மற்றும் ஆதார் எண் பயன்படுத்த விரும்பாதவர்கள் ஆகியோருக்கு மாற்று வழிமுறைகள் மூலம் சரிபார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாததற்காக, யாருக்கும் பத்திரப்பதிவு மறுக்கப்படாது. தற்போதைய சொத்து பரிமாற்ற நடைமுறைகளை கருத்தில்கொண்டு, கட்டாயமாக பதிவு செய்ய வேண்டியவை பட்டியலும், அவற்றுக்கு தேவையான ஆவணங்கள் பட்டியலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பதிவுத்துறை தலைவர், பதிவாளர்கள், சார்பதிவாளர்கள் ஆகியோர் நியமனத்துக்கான நடைமுறைகளும் வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. பதிவுத்துறை கூடுதல் தலைவர், உதவி தலைவர் ஆகிய பதவிகள் அறிமுகம் உள்பட பதிவுத்துறையின் அமைப்பு ரீதியான கட்டமைப்பு நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
காலியிடங்களில் சார்பதிவாளர் நியமன முறை விவரிக்கப்பட்டுள்ளது. தனிநபர்களும், சிறு வணிகர்களும் பலனஅடையும் வகையில் எளிய மொழிநடையுடன் பத்திரங்கள் உருவாக்குவதை ஊக்குவிக்கிறது.
தற்போதைய சட்டப்படி, ஆவணங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால், புதிய வரைவு மசோதா, நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம் என்று கூறுகிறது.
இருப்பினும், மோசடிகளை தவிர்ப்பதற்காக, ஆன்லைன் மூலம் ஆவணங்கள் அளித்தவர்கள், பத்திரத்தை பெறுவதற்கு முன்பு, சார்பதிவாளர் முன்பு நேரில் ஆஜராக வேண்டும்.
தற்போதைய சட்டப்படி, பத்திரத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விரல் ரேகை ஆகியவை வைக்கப்பட வேண்டும். ஆனால், புதிய மசோதாவில், கையெழுத்து மற்றும் வண்ண புகைப்படம் அளிக்கலாம், அல்லது, டிஜிட்டல் கேமரா மூலம் புகைப்படம் எடுக்கப்படலாம், விரல் ரேகையை சாதாரணமாகவோ, பயோமெட்ரிக் கருவி மூலமாகவோ அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ‘பான்’ எண் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது
பத்திரப்பதிவு செய்வதை மறுப்பதற்கான காரணங்களும் புதிய வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. பத்திரம் பதிவு செய்ய மறுப்பதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான நடைமுறையும் கூறப்பட்டுள்ளது.
சார்பதிவாளர் அலுவலகத்தில், கம்ப்யூட்டர், ஸ்கேனர், கிளவுடு ஸ்டோரேஜ் போன்ற கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்த வரைவு மசோதா அனுமதிக்கிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.