July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழக போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு

1 min read

6 percent salary hike for Tamil Nadu Transport Corporation employees

30.6.2025
தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில், 15-வது ஊதிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு தொடங்கியது. இதில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்றது.

போக்குவரத்துத் துறை செயலாளர் க.பணீந்தர்ரெட்டி, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர் உள்ளிட்ட 8 மேலாண் இயக்குநர்கள், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர், தொமுச, சிஐடியு உள்ளிட்ட 85 சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதில், 2023-ம் ஆண்டு செப்.1-ம் தேதி முதல் ஒப்பந்தம் அமலானாலும், 2024-ம் ஆண்டு செப்.1-ம் தேதி முதலே ஊதிய உயர்வுக்கான நிலுவைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட சங்கங்கள் வெளிநடப்பு செய்தன. மீதமுள்ள தொமுச உள்ளிட்ட சங்கங்கள் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
ஒப்பந்தத்தில் கூறியிருப்பதாவது:-
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 6 சதவீதத்தை உயர்த்தி, கடந்த செப்.1-ம் தேதிமுதல் நிலுவைத் தொகை காலாண்டு தவணையாக வழங்கப்படும். அதன்படி, ரூ.1420-6,460 ஊதிய உயர்வு கிடைக்கும். இதில் நிலுவைத் தொகை வழங்க ரூ.319.50 கோடியும், மாதம் தோறும் ரூ.40.26 கோடியும் கழகங்களுக்கு கூடுதல் செலவினம் ஏற்படும்.
1.09 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவர். தொழிலாளர்கள் வாரிசுகளுக்கு கல்வி காலம் முழுவதும் கட்டணமில்லா பயணச் சலுகை தொடரும். அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் ஒரே ஊக்கத் தொகை வழங்குவது தொடர்பான குழு அமைக்கப்படும்.
குறைந்தபட்சத் தொகை ரூ.6-ல் இருந்து ரூ.20-ஆக உயர்த்தப்படும். இதேபோல் இரவு தங்கல்படி, தையற்கூலி, திருமணக்கடன், பண்டிகை முன்பணம் உள்ளிட்டவை உயர்த்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக வெளிநடப்பு செய்த தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:-
அண்ணா தொழிற்சங்க பேரவை பொதுச்செயலாளர் கமலகண்ணன், தலைவர் தாடி ம.இராசு: பெயரளவுக்கு நடைபெற்ற பேச்சுவார்த்தை. அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன்: ஓராண்டு நிலுவைத் தொகை இழப்பால் தொழிலாளர்களுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஓய்வூதியர் பிரச்சினையை ஒப்பந்தத்தில் சேர்க்கவில்லை. சிறப்பு ஊதியமாக ரூ.2000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைக்கு பதில் இல்லை.

தொமுச பேரவை தலைவர் கி.நடராஜன்: தற்போதைய சூழலில் ஊதிய உயர்வு குறித்து உணர்ந்து பேசி ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளோம். போக்குவரத்து தொழிலாளர்களின் இன்னல்களுக்கு முழு காரணம் அண்ணா தொழிற்சங்கம்தான்இவ்வாறு அவர்கள் கூறினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.