குற்றாலம் அருவிகளில் குளிக்க 6ஆவது நாளாக தடை
1 min read
Bathing at Courtallam Falls banned for 6th day
30.5.2025
கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து, நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.தென்காசி மாவட்டத்திற்கு நேற்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டது.
இதனால் காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நகர பகுதியிலும் மதியம் கனமழை பெய்தது. பல்வேறு இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 5 நாட்களாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் கனமழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால்
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க 6-வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.