இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்து பதிலளிக்க சீனா மறுப்பு
1 min read
China refuses to respond to Pakistan’s use of weapons against India
30.5.2025
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மே 7-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அழித்தது.
இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. எல்லையில் 4 நாட்களுக்கு இருநாட்டு படைகளுக்கு இடையே மோதல் நீடித்தது. பின்னர் மோதல் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்தது. இருப்பினும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த மோதலின்போது, சீனாவிடம் இருந்து வாங்கப்பட்ட ஆயுதங்களை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இது குறித்து சீன ஊடக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சீன பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் சாங் சியோகாங் பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். அதே சமயம், பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட, சீனாவின் அதிநவீன ராக்கெட்டாக கருதப்படும் PL-15E என்ற வெடிக்காத ஏவுகணையை இந்திய ராணுவம் கைப்பற்றியதாக வெளியான தகவல் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து சாங் சியோகாங் கூறுகையில், “நீங்கள் குறிப்பிட்ட ஏவுகணை ஒரு ஏற்றுமதி உபகரணமாகும். மேலும் அது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பாதுகாப்பு கண்காட்சிகளில் பலமுறை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.