குமரியில் சூறைக்காற்று- ஒரு நாளில் 150 மின்கம்பங்கள் சேதம்
1 min read
Cyclone in Kumari – 150 electricity poles damaged in one day
31.5.2025
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடற்கரை கிராமங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதியை செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இன்று ராட்சத அலைகள் எழும்பியது. மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்திருந்தனர். மழை பெய்து கொண்டே இருந்தது. சூறைக்காற்றும் வீசியது. சூறை காற்றிற்கு கடற்கரை கிராமங்களில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
நாகர்கோவில் நகர பகுதியில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்கம்பங்கள் சேதமடைந்தது. மீனாட்சிபுரம் பகுதிகளில் நேற்று இரவு முதலே மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இறச்சகுளம், நாவல்காடு, ஆசாரிப்பள்ளம், ஈத்தாமொழி பகுதிகளிலும் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்ததில் மின்வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் இருளில் மூழ்கியது.
ஈத்தாமொழி அருகே சுண்டபற்றிவிளை பிலா விளை பகுதியில் 2 மரங்கள் வீட்டின் மீது முறிந்து விழுந்தது. இதனால் வீட்டுக்குள் இருந்த கணவன்-மனைவி இருவரும் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்தினார்கள். இதை தொடர்ந்து வீட்டுக்குள் தவித்த கணவன்-மனைவி இருவரும் மீட்கப்பட்டனர். நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சரிந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி உள்ளனர்.
குலசேகரம், குழித்துறை, குளச்சல், தக்கலை, கன்னியாகுமரி தீயணைப்பு வீரர்களும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சரிந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். கொட்டாரம் அருகே சந்தையடி பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. இதனால் அதை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது. மின்வாரிய அதிகாரிகள் அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு மரக்கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
சாமிதோப்பு பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் ஒடிந்து விழுந்தன. ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் வீசிய சூறை காற்றிற்கு 150-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உடைந்து சேதம் அடைந்துள்ளது. இன்று காலையில் தொடர்ந்து சூறைக்காற்று வீசியதால் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தது.
தக்கலை, குழித்துறை, இரணியில் பகுதிகளிலும் மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது. குழித்துறை அருகே சென்னித்தோட்டம் பகுதியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. பத்து காணி, ஆறு காணி உள்பட மலையோர பகுதியிலும் விரிகோடு, சரல் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் மரம் முறிந்து விழுந்ததில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரம் இன்றி மக்கள் பாதிக்கப்பட்டனர். மின் கம்பங்களை சீர் செய்து மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை வழங்க துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். மழைக்கு ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் நேற்று மேலும் 3 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது.
திருவட்டார் அருகே ஆற்றூர் பேரூராட்சி 13-வது வார்டுக்குட்பட்ட ஆக்கவிளை பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் நின்ற 2 அயனிமரம், 1 பனைமரம் முறிந்து விழுந்தது. அந்த பகுதியில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது சம்மந்தமாக குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து மரத்தை வெட்டி அகற்றினார்கள். அந்த பகுதியில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. மேலும் இரவு பெய்த மழையில் மின்கம்பம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனே அந்த பகுதியினர் மின்சார வாரியத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து உடனே புதிய மின்கம்பம் அமைத்தனர். தொடர்ந்து இரவே மின்சாரம் வினியோக்கப்பட்டது. இதேபோல் திருவட்டார், குலசேகரம், திருவரம்பு போன்ற பகுதிகளில் வீசிய காற்றால் மரங்கள் முறிந்து சாய்ந்தன. தொடர் மழை பெய்து வருவதால் ஆறு, குளங்களில் தண்ணீர் நிரம்பி வருகிறது.