July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

போலி குற்றவாளிகளை கைது செய்யும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

1 min read

Edappadi Palaniswami condemns DMK government for arresting fake criminals

30.5.2025
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொலைக் குற்றச் சம்பவங்களில், வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று போலி குற்றவாளிகளைக் கைது செய்யும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு கண்டனம்!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆங்காங்கே உள்ள காவல் துறையினர் அரும்பாடுபட்டு உண்மைக் குற்றவாளிகளைப் பிடிப்பது சகஜமான ஒன்றாகும். ஆனால் தமிழ்நாட்டில், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், கொலைக் குற்ற வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உண்மைக் குற்றவாளிகளை தப்பவிட்டுவிட்டு, அவசர கதியில் குற்றங்களுக்கு சம்பந்தம் இல்லாதவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும் போக்கு நடைபெற்று வருவது கொடூரத்தின் உச்சமாகும்.

தமிழகத்தில் ஸ்டாலின் மாடல் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருட்கள் கடத்தல், சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது, அவர்களில் ஒருசிலர் உயிரிழப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக, தனியாக வசிக்கும் வயது முதிர்ந்தவர்கள் கொல்லப்படுவதும், அவர்களிடமிருந்து நகைகள் உட்பட விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு சம்பவம் நிகழும்போதும் தனிப் படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடிவருவதாக ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது. விடியா திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது என்று பலமுறை நான் சட்டமன்றத்தில், இந்த அரசின் கவனத்தை ஈர்த்திருக்கிறேன். ஆனால், முதல்-அமைச்சர் எனக்கு பதில் அளிப்பதைத் தவிர, முதியவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதியவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் ஈரோடு மாவட்டம், சிவகிரியில் வயதான தம்பதிகள் படுகொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. தொடர்ந்து, சிவகிரி சம்பவத்தில் கொலையாளிகள் 3 பேரையும், அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வாங்கியதாக ஒருவரையும் காவல்துறை கைது செய்ததாக, இவ்வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி தெரிவித்ததாகச் செய்திகள் கூறுகின்றன. மேலும், கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளும் ஏற்கெனவே, கடந்த பல ஆண்டுகளாக ஆங்காங்கே நடைபெற்ற 12 குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், அதில் 19 பேர் கொல்லப்பட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்றும் செய்திகள் வந்துள்ளன.

குற்றவாளிகள் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் 12 சம்பவங்களில், 2022-ல் சென்னிமலையில் உப்பிலிபாளையம் தோட்ட வீட்டில் வசித்த வயதான தம்பதி துரைசாமி-ஜெயமணி ஆகியோரையும்; 2023-ல் சென்னிமலை ஒட்டன்குட்டை களியாங்காட்டுதோட்டத்தில் வசித்த முத்துசாமி-–சாமியாத்தாள் தம்பதிகள் ஆகியோரையும் தாக்கிக் கொன்று கொள்ளையடித்த சம்பவம் மற்றும் 2024 நவம்பர் மாதம் திருப்பூர் மாவட்டம் சேமலைகவுண்டம்பாளையம் தோட்ட வீட்டில் இருந்த தெய்வசிகாமணி-அலமேலு தம்பதியினரும், அவரது மகன் செந்தில்குமார் ஆகிய மூவரையும் இந்த கும்பல் கொலை செய்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

ஆனால் தமிழகக் காவல்துறை, சென்னிமலையில், 2022-ல் நடைபெற்ற உப்பிலிபாளையம் கொலைச் சம்பவம் மற்றும் 2023-ல் ஒட்டன்குட்டை கொலைச் சம்பவங்களில் விசாரணை நடத்தி, ஏற்கெனவே 11 பேரை கைது செய்து இவர்கள்தான் கொலையாளிகள் என்று குற்றஞ்சாட்டி சிறையில் அடைத்துள்ளனர். அப்படியென்றால், இவ்விரண்டு வழக்குகளிலும் ஏற்கெனவே கைதான 11 பேர் அக்குற்றச் சம்பவங்களைப் பொறுத்தவரை அப்பாவிகளா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது.

பல்வேறு குற்ற நிகழ்வுகளில் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத முதல்-அமைச்சரின் கீழ் செயல்படும் காவல் துறையினர் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் என்று சம்பந்தமில்லாதவர்கள் மீது குற்றத்தைச் சுமத்தி வழக்குகளை முடிக்கப் பார்த்துள்ளது இதன்மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. மேலும், இதுபோன்ற செயல்களினால் இந்த வழக்குகள் விசாரணைக்கு வரும்போது உண்மைக் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்தும், தண்டனையில் இருந்தும் தப்பிக்க வழிவகை ஏற்படும்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், உண்மைக் குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை என்று அவரது மனைவியே கூறும் நிலையில், திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாத நிலையில், திருச்சி அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் சி.பி.ஐ.-யிடமிருந்து இந்த விடியா ஆட்சியாளர்கள் தங்கள் கைகளில் எடுத்து ஒருசில ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகளை நெருங்கக்கூட முடியாத நிலையில், ‘எங்கள் ஆட்சியில் காவல் துறையினர் குற்றங்களை விரைந்து விசாரித்து உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்து நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருகிறோம்’ என்று நிர்வாகத் திறமையற்ற முதல்-அமைச்சர் ஸ்டாலின் மார்தட்டிக்கொள்வது, `கேப்பையில் நெய் வடிகிறது’ என்பது போலத்தான்.

சிவகிரி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள், அவர்களே ஒப்புக்கொண்ட குற்றங்களில், வேறு பலரைக் கைதுசெய்து சிறையில் அடைத்த இந்த ஏமாற்று மாடல் அரசின் காவல்துறை, இன்னும் எத்தனைக் குற்ற வழக்குகளில் உண்மைக் குற்றவாளிகளுக்குப் பதிலாக சம்பந்தமில்லாதவர்களைக் கைதுசெய்து வழக்குகளை முடித்து வைத்துள்ளது என்ற விவரங்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மலரும்போது வெளிக்கொண்டுவரப்படும். திமுக ஆட்சியாளர்களின் கைக்காட்டுதலுக்கு அடிபணிந்து தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.