சென்னையில் 3-ந் தேதி முதல் மின்சார பேருந்து சேவை: முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்
1 min read
Electric bus service to start in Chennai from June 3rd: Chief Minister to inaugurate
30.5.2025
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 5 பணிமனைகளில் இருந்து 625 மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த வகையில், வியாசர்பாடி பணிமனையில் இருந்து 120 பேருந்துகள் இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு பேருந்துகளுக்கு சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளை சமீபத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பார்வையிட்டார். இனி, வியாசர்பாடி பணிமனையில் மின்சார பேருந்துகள் மட்டும் நிறுத்தப்படும். இங்குள்ள டீசல் பேருந்துகள் வேறு பணிமனைகளுக்கு மாற்றப்பட உள்ளன.
இந்த நிலையில், புதிய மின்சார பேருந்துகள் ஜூன் 3-ந் தேதி முதல் சென்னையில் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகளை டெண்டர் எடுத்துள்ள நிறுவனமே இயக்கவும், பராமரிக்கவும் உள்ளது. டிக்கெட் கொடுக்கும் பணியில் அரசு நடத்துநர்கள் பணியாற்றுவார்கள். புதிய மின்சார பேருந்தில் கட்டணமும் வழக்கம் போலவே இருக்கும் என்று மாநகர போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 120 மின்சார பேருந்து சேவைகளை சென்னையில் ஜூன் 3-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் 505 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என்று மாநகர போக்குவரத்து சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.