வைகோவிற்கு எம்.பி. பதவி வழங்காதது வருத்தம் அளிக்கிறது- துரை வைகோ பேட்டி
1 min read
Vaiko regrets not being given MP post – Durai Vaiko interview
30.5.2025
ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
வைகோ 1978-ம் ஆண்டு 34-ம் வயதில் பாராளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாராளுமன்ற இரு அவைகளிலும் பணியாற்றி உள்ளார். நதி நீர் இணைப்பு குறித்து யாரும் சிந்திக்காத காலங்களில் தனி நபர் மசோதாவை கொண்டு வந்தவர் வைகோ.
வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது, மே 1-ந்தேதி ஊதியத்துடன் விடுமுறை, என்.எல்.சி தனியார் மயமாக்கலை தடுத்தது, ரெயில்களில் டி.டி.ஆருக்கு படுக்கை வசதி, பாராளுமன்றத்தில் அம்பேத்கர் படம் வைக்க குரல் கொடுத்தது, ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுத்தது என பலவற்றில் பங்காற்றியவர் வைகோ.
1978-ம் ஆண்டு முதன் முதலாக பாராளுமன்றத்தில் சென்றபோது ஹிந்தி திணிப்புக்கு எதிராக பேசினார். தற்பொழுது தன்னுடைய 81 வது வயதில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடியும் நேரத்திலும் கூட மும்மொழி கொள்கைக்கும், இந்தி திணிப்புக்கும் எதிராக பேசினார்.
3 முறை மத்திய மந்திரி பதவி தேடி வந்த பொழுதும் அதை மறுத்தவர் வைகோ. அந்த தலைவருக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பின ராக வாய்ப்பு அளிக்காதது எங்களுக்கு வருத்தமும் வேதனையும் அளிக்கிறது.
பொன் குடம் உடைந்தாலும் அது பொன் குடம் தான். பாராளுமன்ற புலி வைகோ தான். வைகோவிற்கு பதவி ஒரு பொருட்டல்ல, மக்கள் பணி எப்போதும் தொடரும்.
நாங்கள் கடந்த ஆண்டு தேர்தல் நேரத்திலேயே மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டோம். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தி.மு.க. தலைமை தெரிவித்தார்கள்.
மாநிலங்களவை கிடைக்கும் என நம்பினோம். ஆனால் இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் எங்களுக்கு வருத்தம் உள்ளது.
தமிழ்நாட்டு நலன் கருதி நாங்கள் அதை கடந்து செல்வோம். கூட்டணியில் தொடருவோம். தமிழ்நாட்டின் நலனுக்காக கூட்டணியில் இணைந்து பணியாற்றுகிறோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் வைகோ போட்டியிடுவது குறித்து அவரும் கட்சி தலைமையும் தான் முடிவெடுப்பார்கள்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சாதாரண மக்கள் தான் பாதிக்கப்பட்டார்கள். அதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. மீண்டும் அது போன்ற நடவடிக்கைகள் தேவையில்லாதது.
ஜூன் 22-ந்தேதி ம.தி.மு.க. பொதுக்குழு நடைபெற உள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி அங்கீகாரம் பெறுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அதில் விவாதிக்க உள்ளோம்.
தமிழ் மொழி தான் முதல் மொழி என்பதை மொழியியல் அறிஞர்கள் கூறியுள்ளார்கள். இது குறித்து கமல் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. தற்போது அந்த விவகாரம் அரசியலாக்கப்படுகிறது.
ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே உள்ள பிரச்சனை அவர்கள் கட்சி சார்ந்தது. அதில் நான் கருத்து கூறுவது ஆரோக்கியமானதாக இருக்காது.
பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலம் தமிழ்நாடு என கூறும் நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு சென்று பார்க்கட்டும். அங்கு நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தான் அதிகம். இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில துணை பொதுச் செயலாளர் ரொகையா, மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம், அவைத்தலைவர் புலவர் தியாகராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் துரை வடிவேல், எல்லக்குடி அன்புராஜ், பொருளாளர் யானை கண்ணன், பகுதி செயலாளர்கள் ஆசிரியர் முருகன், ஆடிட்டர் வினோத், செல்லத்துரை, மகளிர் அணி சந்திரா ஜெகநாதன், வட்டச் செயலாளர் சாதிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.