மாணவ-மாணவிகளுக்கு விஜய் பரிசு
1 min read
Vijay Prize for students
30.5.2025
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மாணவ- மாணவிகளின் கல்வி ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார். மாநில அளவில் முதலிடம் பிடிப்பவர் மாணவராக இருந்தால் வைர மோதிரமும், மாணவியாக இருந்தால் வைர கம்மலும் வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் மாணவ-மாணவிகளுக்கு 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா மற்றும் பரிசளிப்பு விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஓட்டலில் உள்ள அரங்கத்தில் இன்று நடைபெற்றது.
விழாவில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை பெரம்பலூர், வேலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு உட்பட்ட 88 தொகுதிகளில் உள்ள மாணவ- மாணவிகள் 600 பேர் பங்கேற்றனர்.
10-ம் வகுப்பு, பிளஸ்- 2 தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள், மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள், அதிக மதிப்பெண் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவ-மாணவிகள், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள சாதனை படைத்த மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோருடன் விழாவில் பங்கேற்றனர். விழாவில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை 7 மணியில் இருந்தே மாணவ-மாணவிகள் வரத் தொடங்கினார்கள். அவர்கள் வைத்திருந்த அடையாள அட்டையை ஸ்கேன் செய்து உள்ளே அனுப்பினார்கள். ஒவ்வொரு மாணவ-மாணவிகளுடனும் அவர்களின் பெற்றோரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
உள்ளே சென்ற மாணவ-மாணவிகளுக்கு தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நொறுக்குதீனி மற்றும் குடிநீர் பாட்டில் வழங்கி உள்ளே அனுப்பி வைத்தார்.
காலை 9 மணிக்குள் அனைத்து மாணவ-மாணவிகளும் இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர்.
விழாவில் பங்கேற்பதற்காக விஜய் காலை 8.30 மணிக்கு தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். காலை 9 மணிக்கு அவர் விழா நடைபெறும் ஓட்டலை வந்தடைந்தார்.
காலை 10 மணிக்கு விஜய் விழா நடைபெறும் அரங்கத்துக்குள் வந்தார். அப்போது அரங்கத்தின் இருபுறமும் இருந்த மாணவ-மாணவிகளை பார்த்து அவர் உற்சாகமாக கை அசைத்தபடியே வந்தார்.
பின்னர் அரங்கத்தின் முன்பகுதிக்கு வந்த விஜய் சிறிது நேரம் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவிகளுடன் அமர்ந்திருந்தார். பின்னர் மாற்றுத் திறனாளி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
இதையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா தொடங்கியது. பின்னர் மேடைக்கு வந்த விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பின்னர் விழாவில் விஜய் பேசியதாவது:-
உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக மிக மகிழ்ச்சி. நீங்கள் சிறந்த சாதனை படைத்ததற்காக வாழ்த்துக்கள். படிப்பில் சாதிக்க வேண்டும்தான். படிப்பும் சாதனைதான். அதை நான் மறுக்கவில்லை. அதற்காக ஒரே ஒரு படிப்பில் மட்டும் நாம் சாதித்தே ஆக வேண்டும் என்று நினைப்பது சாதனை கிடையாது.
ஒரே விஷயத்தை பற்றி திரும்ப திரும்ப யோசித்து அழுத்தத்தை ஏற்றிக் கொள்ளாதீர்கள். அவ்வளவு மன அழுத்தத்துக்கு ஆளாக வேண்டிய விஷயம் ஒன்றுமே கிடையாது.
இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் நீட் மட்டும் தான் உலகமா? நீட்டை தாண்டி இந்த உலகம் ரொம்ப ரொம்ப பெரியது. அதில் நீங்கள் சாதிக்க வேண்டியது பல விஷயங்கள் இருக்கிறது.
அதனால் இப்போதே உங்கள் மனதை ரொம்ப வலிமையாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதை ஜனநாயகமாக வைத்துக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால் ஜனநாயகம் என்று ஒன்று இருந்தால்தான் இந்த உலகமும் சரி இந்த உலகத்தில் உள்ள எல்லா துறையும் சரி சுதந்திரமாக இருக்க முடியும்.
அது மட்டுமல்ல ஒரு முறையான ஜனநாயகம் இருந்தாலே மேலும் எல்லோருக்கும் எல்லாமும் சமமாக கிடைக்கும். அதனுடைய முதல்படியாக உங்கள் வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்லுங்கள். அவர்களின் ஜனநாயக கடமையை ஒழுங்காக செய்ய சொல்லுங்கள்.
ஜனநாயக கடமையை சரியாக செய்வது என்றால் அது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. அது சாதாரணமான விஷயம்தான். நல்லவர்கள், நம்பிக்கையானவர்கள், இதுவரை ஊழலே செய்யாதவர்கள் யார் என்று பார்த்து அவர்களை தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். அவ்வளவுதான். இது மிகவும் எளிது. இதுதான் அந்த கடமை.
நான் 2 வருடத்துக்கு முன்பே இதே மாணவர்களுக்கான நிகழ்ச்சியில் சொல்லி இருந்தேன். காசு கொடுத்து ஓட்டு வாங்கி ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறார்கள் இல்லையா? அந்த கலாச்சாரத்தை யாரும் ஊக்கப்படுத்தாதீர்கள். யாரும் காசு வாங்காதீர்கள். உங்கள் பெற்றோரிடமும் எடுத்து சொல்லுங்கள் என்று சொல்லி இருந்தேன். அதை அப்படியே பின்பற்றுங்கள்.
ஆனால் நீங்கள் வேண்டுமானால் அடுத்த வருடம் என்ன நடக்கப் போகிறது என்று பாருங்கள். வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போகிறார்கள். அது அத்தனையும் உங்களிடம் இருந்து கொள்ளையடித்த பணம்தான். என்ன பண்ண போகிறீர்கள்? என்ன பண்ணனும் என்று உங்களுக்கு சரியாக தெரியும். அதை நான் சொல்லித்தான் புரிய வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பெற்றோர்களே… உங்களிடம் ஒரு சின்ன வேண்டுகோள்… உங்கள் குழந்தைகளின் விஷயத்தில் எதிலும் கட்டாயப்படுத்தாதீர்கள். அவர்களுக்கு அழுத்தத்தை கொடுக்காதீர்கள். அவர்களுக்கு என்ன பிடித்து இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி வழி நடத்துங்கள். நான் கண்டிப்பாக சொல்கிறேன், எத்தனை தடைகள் வந்தாலும் அவரவர்களுக்கு பிடித்த விஷயங்களில், அவரவர்களுக்கு பிடித்த துறையில் அவர்கள் கண்டிப்பாக சாதித்து காட்டுவார்கள்.
இன்னொரு முக்கியமான விஷயத்தை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது என்னவென்றால், சாதி மதத்தை வைத்து, இந்த பிரிவினையை வளர்க்கிற சிந்தனை பக்கமே போய் விடாதீர்கள். அந்த சிந்தனை உங்களையோ அல்லது உங்கள் மனதையோ தொந்தரவு கொடுக்கிற அளவுக்கு எதற்கு இடம் கொடுக்காதீர்கள்.
விவசாயிகள் சாதி, மதம் பார்த்தா பொருளை விளைய வைக்கிறார்கள்? தொழிலாளர்கள் சாதி, மதம் பார்த்தா பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள்? இவ்வளவு ஏன்… இயற்கை அம்சங்களான வெயில், மழையில் சாதி இருக்கிறதா, மதம் இருக்கிறதா? போதைப் பொருட்களை நாம் எப்படி அறவே ஒதுக்கி வைக்கிறோமோ அதே போல் இந்த சாதி மதத்தையும் கட்டுப்பாட்டுடன் ரொம்ப தூரமா? எவ்வளவு தூரமா ஒதுக்கி வைக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அதை தூரமா ஒதுக்கி வைத்து விடுங்கள். அதுதான் எல்லோருக்குமே நல்லது.
சமீப காலமாக பார்த்தால் தந்தை பெரியாருக்கே சாதி சாயம் பூச முயற்சி செய்கிறார்கள். ஒன்றிய சிவில் சர்வீஸ் தேர்வில் கூட சாதி சாயம் பூசுவது போல ஒரு கேள்வி கேட்டுள்ளார்கள். இதையெல்லாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த விசயத்தில் எது சரி, எது தவறு என்பதை ஆராய்ந்து பார்த்தாலே போதும் ஒரு குழப்பம் இல்லாத தெளிவான வாழ்க்கையை வாழலாம்.
எதற்கும் ரொம்ப உணர்ச்சி வசப்படாதீர்கள். அவ்வளவு மதிப்பு எல்லாம் இல்லை. தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ரீதியாகவே சிந்தியுங்கள். ஏனென்றால் ஏற்கனவே வந்து விட்ட செயற்கை நுண்ணறிவு உலகத்தை எதிர்கொள்ள அதுதான் ஒரே வழி.
வானம் பரந்ததாகவும், அகலமாகவும் இருக்கிறது. உங்களுக்கும் வலுவான இறக்கைகள் உள்ளன. எனவே நண்பர்களே நீங்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும். பறவையை போல் நம்பிக்கையுடனும், தைரியமுடனும் பறக்க வேண்டும்.
எவ்வளவோ பண்ணி விட்டோம். இதை பண்ண மாட்டோமா? எவ்வளவோ பார்த்து விட்டோம். இதை பார்க்க மாட்டோமா? என்கிற நேர்மறை சிந்தனையுடன் பயணியுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
இவ்வாறு விஜய் பேசினார்.
10-ம் வகுப்பில் 500-க்கு 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த அரியலூர் மாவட்ட மாணவி சோபியா மற்றும் பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஓவியாஞ்சலி ஆகியோருக்கு வைர கம்மலை விஜய் பரிசாக வழங்கினார்.
பின்னர் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு விஜய் பரிசு வழங்கினார். அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் மாற்றுத்திறனாளிகளில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கும் ரூ.5 ஆயிரம் காசோலை மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை விஜய் வழங்கினார்.
பரிசுகளை பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
600 மாணவ-மாணவிகளுக்கும் விஜய் நேரில் பரிசு வழங்கி உற்சாகப்படுத்தினார். விருது பெற்ற மாணவ-மாணவிகளிடம் தனித்தனியாக பேசிய விஜய், இதேபோல் நன்றாக படித்து தொடர்ந்து முன்னேறி வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மதியம் 21 வகையான அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது.
மீதமுள்ள தொகுதிகளில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கான 2-ம் கட்ட பரிசளிப்பு விழா அடுத்த வாரமும், 3-ம் கட்ட பரிசளிப்பு விழா அதற்கடுத்த வாரமும் நடைபெற உள்ளது.