வீரியம் இல்லாத கொரோனாவால் பெரிய பாதிப்பு இல்லை- மா.சுப்பிரமணியன் பேட்டி
1 min read
Mild corona does not have a major impact – Interview with Ma. Subramanian
31.5.2025
இந்தியாவில் கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
கொரோனா உருமாற்றம் பெற்று வருகிறது. இந்தியா முழுவதும் 1800-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வீரியம் இல்லாத ஒமைக்ரான் வகையிலான தொற்று தற்போது பரவி வருகிறது. ஆனாலும் பெரிய பாதிப்பு ஏற்படுத்துவது இல்லை. ஒமைக்ரான் வகையிலான கொரோனாவால் யாரும் பதற்றம் அடைய தேவை இல்லை. பதற்றம் அடைய வேண்டியதில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகமே தெரிவித்துள்ளது.
வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. புனே ஆய்வு மையத்துக்கு 17 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. கொரோனா பரவல் குறித்து பதற்றம் அடைய வேண்டாம்.
கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை; அணிந்தால் நல்லது. தவறான தகவல்களை பரப்பி பதற்றத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்து உள்ளது. 1,000 ஆண் குழந்தைகளுக்கு 931 பெண் குழந்தைகள் இருந்த நிலை மாறி 940 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.