வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை மயங்கி விழுந்து சாவு
1 min read
Teacher collapses and dies while teaching in classroom
31.5.2025
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மாராயமுட்டம் பகுதியை சேர்ந்தவர் வினோதினி (வயது 49). இவர் பாறசாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவர் காலையில் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆனாவூர் அரசு பள்ளியில் கேரள கல்வித்துறையின் சிறப்பு திட்டத்தின் கீழ் சிறுவர்களுக்கு வகுப்பறையில் கம்ப்யூட்டர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் வினோதினி திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதைக்கண்டு அங்கிருந்த சக ஆசிரியர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பலனின்றி ஆசிரியை வினோதினி பரிதாபமாக உயிரிழந்தார். வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது ஆசிரியை மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.