சேலத்தில்கொரோனாவுக்கு ஒருவர் பலி
1 min read
The number of people infected with Corona across the country has increased to 2,710
31.5.2025
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவிலிருந்து பரவிய கொரோனா தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன்பின் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது. கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் தற்போது கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 1,147 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் 424, டெல்லி 294, குஜராத் 223, தமிழ்நாடு 148, கர்நாடாகா 148, மற்றும் மேற்கு வங்காளத்தில் 116 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் 1,010 ஆக இருந்த கொரோனா பாதிப்பு அடுத்த 4 நாட்களில் இருமடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வாலிபர் கொரோனா பாதிப்புடன் இருந்த நிலையில் சிறுநீரகம், நுரையீரல் பாதிப்பும் அவரது உயிரிழப்புக்கு காரணம் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டுமென தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.