நெல்லையில் பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறுகள் கட்ட தடை
1 min read
Ban on tying colored ropes on the hands of school students in Nellai
4.6.2025
நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல், பள்ளி வளாகத்திற்குள் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்த நிலையில், எதிர்வரும் கல்வியாண்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், கல்வித்துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், தனது நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் 14 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் நல்லொழுக்கத்தை பேணும் வகையில் இந்த 14 கட்டுப்பாடுகளும் ஆசிரியர்களால் கண்காணிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் முறையாக தலைமுடியை வெட்டியிருக்க வேண்டும், பள்ளிக்கு விடுமுறை எடுக்கும் மாணவர்கள் பெற்றோரிடம் முறையான அனுமதி பெற்று அதற்கான ஒப்புதலை வகுப்பு ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும், முறையில்லாமல் விடுப்பு எடுத்திருந்தால் அடுத்த நாள் பள்ளிக்கு வரும்போது பெற்றோரை அழைத்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதே போல் பள்ளிக்கு வரும் மாணவர்கள் தங்கள் கைகளில் வண்ணக் கயிறுகளை கட்டியிருக்க கூடாது, நெற்றியில் கலர் கலரான பொட்டுகள் வைத்திருக்க கூடாது, மாணவிகள் கலர் ரிப்பன் கட்டி வருவதை தவிர்க்க வேண்டும், பள்ளி சீருடையோடு கொடுக்கப்படும் வண்ண ரிப்பன்களை மட்டுமே அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகளிடையே மோதல் ஏற்படாமல் இருப்பதை கண்காணிக்கும் பணியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும், தினந்தோறும் பள்ளி நுழைவாயிலில் அனைத்து மாணவர்களின் புத்தக பைகளையும் சோதனை செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.