ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயம்
1 min read
Aadhaar verification becomes mandatory for booking Tatkal tickets in trains
5.6.2025
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை ரெயில்வே எடுத்து வருகிறது. ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் காலியாகி விடுவதாகவும், இடைத்தரகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து விடுவதாகவும் பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதையடுத்து, இத்தகைய பிரச்சினைகளை தீர்க்க ரெயில்வே தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், தட்கல் முன்பதிவு தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய ரயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். அதாவது, ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இனி ஆதார் சரிபார்ப்பு விரைவில் கட்டாயம் ஆக்கப்பட இருப்பதாக கூறியுள்ளார். இந்த புதிய நடவடிக்கை மூலம் உண்மையான பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆதார் எண் இணைத்து வெரிபிகேஷன் எனப்படும் சரிபார்ப்பு செய்து வைத்து இருக்கும் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்ய முடியும். மேலும், ஆதார் மூலம் வரும் ஓடிபி எண்ணை பதிவு செய்த பிறகே டிக்கெட் புக் செய்யும் வகையில் மாற்றியமைக்கப்பட இருப்பதாகவும் ரெயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. கவுன்ட்டர்களில் தட்கல் டிக்கெட் பெற ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு மாத இறுதியில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
ரெயில்களில் 60 நாட்களுக்கு முன்பாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். மொத்தம் உள்ள டிக்கெட்டுகளில் 20 சதவீதம் தட்கல் முன்பதிவுக்கு ஒதுக்கப்படுகிறது. ஏசி வகுப்பு தட்கல் டிக்கெட்டுகளை காலை 10 மணிக்கும், ஸ்லீப்பர் வசதி கொண்ட பெட்டிகளுக்கான டிக்கெட்டை 11 மணிக்கும் முன்பதிவு செய்ய முடியும்.