டிரைவரை செருப்பால் அடித்த போக்குவரத்து உதவி மேலாளர் சஸ்பெண்ட்
1 min read
Assistant Transport Manager suspended for hitting driver with shoe
10.6.2025
மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, நேற்று முன் தினம் பக்ரீத், வார விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏராளமான பயணிகள் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் குவிந்தனர்.
அப்போது, திருப்பூர் செல்லும் அரசு பஸ் வெகுநேரம் ஆகியும் புறப்படாததால் பயணிகள் போக்குவரத்து உதவி மேலாளர் மாரிமுத்துவிடம் முறையிட்டனர். ஆனால், உதவி மேலாளர் பயணிகளை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, பஸ் டிரைவர் கணேசன் உதவி மேலாளர் அறைக்கு வந்துள்ளார்.
அங்கு போக்குவரத்து உதவி மேலாளர் மாரிமுத்துவுக்கும், பஸ் டிரைவர் கணேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பஸ் டிரைவரை உதவி மேலாளர் செருப்பால் அடித்தார். இந்த சம்பவத்தை அங்கு நின்றுகொண்டிருந்த பயணிகள் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் போக்குவரத்து உதவி மேலாளர் மாரிமுத்து மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுத்தது.
இந்நிலையில், டிரைவரை செருப்பால் அடித்த விவகாரத்தில் உதவி மேலாளர் மாரிமுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாரிமுத்துவை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து மதுரை மண்டல போக்குவரத்து நிர்வாக இயக்குநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதேவேளை, இந்த விவகாரம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாரிமுத்து மன்னிப்பு கேட்டுள்ளார். போக்குவரத்து துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுவிட்டதாகவும், பஸ் டிரைவர் கணேசனிடம் மன்னிப்பு கேட்பதாகவும் மாரிமுத்து கூறியுள்ளார். மேலும், துறை ரீதியில் எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.