மணிப்பூரில் தடையை மீறி போராட்டம்- உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு தீவைப்பு
1 min read
Protest in Manipur defying ban – Assistant Collector’s office set on fire
10.6.2025
“மணிப்பூரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சோ்ந்த தலைவா் ஒருவா் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து, அங்கு மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. தங்கள் தலைவரை விடுவிக்கக்கோரி, மெய்தி இன மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.கலவரத்தை கட்டுப்படுத்த 5 மாவட்டங்களில் இணையதள சேவையை முடக்கி வைக்க கவர்னர் அஜய்குமார் பல்லா உத்தரவிட்டார். அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், தடை உத்தரவை மீறி நள்ளிரவிலும் போராட்டம் நீடித்தது. இம்பால் கிழக்கு மாவட்டம் யாய்ரிபோக் துலிஹலில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இதனால் கட்டிடத்தின் ஒருபகுதி சேதம் அடைந்தது. அரசு கோப்புகள் எரிந்து சாம்பலாகின. கலவரக்காரர்களை அடையாளம் காண போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இம்பால் மேற்கு மாவட்டம் குவாகிதெல், சிங்ஜமேய் ஆகிய இடங்களில் பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. அதனால், போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்களை கலைக்க ரப்பர் தோட்டாக்களால் சுட்டனர்.
பல சாலைகளில் மூங்கில் கம்புகளால் போராட்டக்காரர்கள் தடையை ஏற்படுத்தினர். இருப்பினும், இம்பால் விமான நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட சாலைகளில் தடுப்புகள் அகற்றப்பட்டன. பெண்கள் குழுக்களும் போராட்டத்தில் இணைந்தன. குராய் என்ற இடத்தில் அவர்கள் டார்ச்லைட் ஏந்தி ஊர்வலம் நடத்தினர். மணிப்பூரில் மாற்று அரசு அமைக்கக்கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மணிப்பூரில் மீண்டும் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.