லாஸ் ஏஞ்சல்சில் போராட்டம்: கலிபோர்னியா கவர்னருக்கு டிரம்ப் எச்சரிக்கை
1 min read
Protests in Los Angeles: Trump warns California governor
10.6.2025
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் தீவிரமாக எடுத்து வருகிறார். இதனையொட்டி ஏராளமானோர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள். இதில் மெக்சிகோவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் கைது செய்யப்படுகிறார்கள்.
இதற்கிடையே அதிபர் டிரம்பின் நடவடிக்கையை கண்டித்து கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் ஏராளமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. வணிக வளாகங்கள் சூறையாடப்பட்டன.
மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
போராட்டத்தை போலீசாரால் கட்டுப்படுத்த முடியாததால் தேசிய படையை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அனுப்பப்பட்டனர். ஆனாலும் கலவரம் கட்டுக்குள் வரவில்லை.
லாஸ் ஏஞ்சல்சில் 4-வது நாளாக போராட்டங்கள் நடந்து வருகிறது. மேலும் கலவரத்தால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே லாஸ் ஏஞ்சல்சில் நடந்து வரும் போராட்டங்கள், கலவரத்தை ஒடுக்க கூடுதலாக தேசிய படையை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்களை அனுப்ப அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.
இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்சில் நடந்து வரும் போராட்டங்கள் தொடர்பாக அதிபர் டிரம்ப் மற்றும் கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய கவர்னர் கவின் நியூசம், “லாஸ் ஏஞ்சல்சுக்கு தேசிய படையை அனுப்பிய டிரம்பின் நடவடிக்கை பொறுப்பற்றதாகும். இது எங்கள் துருப்புக்களுக்கு அவமரியாதை அளிப்பதாக உள்ளது. கலிபோர்னியா கவர்னர், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் என யாரையும் கேட்காமல், தன்னிச்சையாக தேசிய படைகளை அனுப்பி உள்ளார். இது சட்டவிரோதமானது. கலிபோர்னியா மாகாணத்தின் இறையாண்மையை பறிக்கும் செயலாகும். இதுதொடர்பாக டிரம்ப் மீது வழக்கு தொடருவோம். டிரம்ப் சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய டிரம்ப், கலவரங்களைச் சமாளிக்க” தேசிய காவல்படை துருப்புக்களை அனுப்பி இருக்காவிட்டால் லாஸ் ஏஞ்சல்ஸ் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கும். இதற்கு கவர்னர், மேயர் எனக்கு நன்றி தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் கவர்னர் விமர்சனம் செய்து வருகிறார். அவரை கைது செய்ய கூட நான் பரிந்துரைப்பேன். கவர்னர் கவின் நியூசம் விளம்பரத்தை விரும்புகிறார். அவர் மிகவும் திறமையற்றவர் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் போராட்டங்களைச் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய பெண் செய்தியாளர் ஒருவர் ரப்பர் தோட்டாவால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைன் நியூஸ் அமெரிக்க செய்தியாளர் லாரன் டோமாசி ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தச் சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தபோது அவரது காலில் ரப்பர் தோட்டா தாக்கியது. இந்தச் சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே, அங்கிருந்த போராட்டக்காரர்கள் டோமாசியிடம் சென்றனர். அவர் நலமாக இருப்பதாகப் பதிலளித்தார். சில போராட்டக்காரர்கள் காவல் நிலையத்தை நோக்கி, “நீங்கள் செய்தியாளரை சுட்டுக் கொன்றீர்கள்” என்று கோஷமிட்டனர்.
இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து நைன் நியூஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. லாரன் டோமாசி மற்றும் அவரது கேமராமேன் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் தொடர்ந்து தங்கள் செய்திகளை வெளியிடுவார்கள் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.