தென்காசி:சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைத்தால் நடவடிக்கை
1 min read
Tenkasi: Action will be taken if electric fence is erected illegally
10/6/2025
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட தென்காசி கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் தென்காசியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தென்காசி கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) கற்பகவிநாயகம் சுந்தரம் மற்றும் ஏனைய அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.
மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி பேசும்போது, தற்போது தென்மேற்கு பருவமழை சூறைக்காற்றுடன் கூடிய மழை பொழிவு இருப்பதால் இரவு நேரங்களில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுடன் பணிகள் தொடரவும், ஏதேனும் இயற்கை இடர்பாடுகளால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டால் வள்ளியூர் கோட்ட பொறியாளர்கள் ஒருங்கிணைந்து பணிகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்து மீண்டும் உடனடியாக மின் விநியோகம் வழங்க வேண்டும் என்றார்.
மேலும் அவர், மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான குற்றாலம், வடகரை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில் வனத்துறையுடன் இணைந்து கூட்டு கள ஆய்வு மேற்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, மின்வேலி அமைக்கப்பட்டிருந்தால் வனத்துறை மற்றும் காவல்துறை உதவியுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகளால் மின் கட்டமைப்புகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் பொது மக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் செயலி மூலமாகவும், (TNPDCL OFFICIAL APP) திருநெல்வேலி மின் தடை நீக்கும் மைய தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, 9445859034, மற்றும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987-ஐ தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.