ரளா அருகே வெடித்துச் சிதறும் அபாயத்தில் சிங்கப்பூர் கப்பல்
1 min read
Singapore ship at risk of exploding near Rala
11.6.2025
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மும்பை நோக்கி ‘எம்.வி. வான ஹை 503’ என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. அந்த சரக்கு கப்பல் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் கடற்கரை அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று கப்பலின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. கப்பலில் இருந்த கன்டெய்னர்களுக்கும் தீ பரவியதால், அவற்றில் சில பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனால் சரக்கு கப்பலில் இருந்த கேப்டன் உள்பட 22 பேர் உயிர் தப்பிக்க கடலில் குதித்தனர். இதனால் அவர்கள் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதுபற்றி அறிந்ததும் அழிக்கல் துறைமுகத்தில் இருந்து கடலோர பாதுகாப்பு படையினர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விமானம் மூலமும் மீட்பு பணியை மேற்கொண்டனர்.
இந்த மீட்பு பணியில் இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ். சூரத் ஈடுபட்டது. இதனைத்தொடர்ந்து நடுக்கடலில் தத்தளித்த 18 பேரையும் மீட்பு குழுவினர் மீட்டு ஐ.என்.எஸ். சூரத் கப்பல் மூலம் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பனம்பூரில் உள்ள புதிய மங்களூரு கப்பல் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். மீட்கப்பட்டவர்களில் 6 பேர் காயம் அடைந்திருந்தனர். அவர்களில் 2 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தது. இதையடுத்து அவர்கள் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 12 பேர் காயமின்றி தப்பினர்.
கடலில் மாயமான மீதமுள்ள 4 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணியில் டிரோன்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீட்கப்பட்டவர்கள் சீனாவை சேர்ந்த 8 பேர், தைவானை சேர்ந்த 4 பேர், மியான்மரை சேர்ந்த 4 பேர், இந்தோனேசியாவை சேர்ந்த 2 பேர் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் கேரள கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் தற்போது வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குளோரோ பார்மேட், டைமெத்தில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோசைனேட், பைரிடியம் உள்ளிட்ட ரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளதால் வெடித்துச் சிதறலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
கப்பலில் தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை. இந்திய கடற்படையின் கப்பல்கள் மற்றும் கடலோர காவல்படையின் விமானங்கள் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.
ஒருவேளை வெடிப்பு ஏற்பட்டால், கேரளக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தொழில், சுற்றுச்சூழல், மற்றும் சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.