11 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு அளித்த சிறப்பு திட்டம் என்ன? – மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min read
What special scheme has the central government given to Tamil Nadu in the last 11 years? – MK Stalin’s question
12.6.2025
சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது;
11 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு அளித்த சிறப்பு திட்டம் என்ன? மத்திய அரசின் எந்த திட்டங்களுக்கும் முழு நிதி மாநில அரசுக்கு வந்து சேர்வதில்லை. பிரதமர் பெயரில் உள்ள திட்டங்களுக்கே மாநில அரசு தான் கூடுதல் நிதி கொடுக்கிறது. சட்டையில் இருந்தால் தான் அகப்பையில் வரும்… எனவே எந்த சாதனையையும் மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. அன்றைய பொருளாதாரம், விலைவாசி நிலை என்ன? தற்போதைய நிலை என்ன? மதுரையின் தொன்மையை நிராகரிக்கும் வகையில் பேசியிருக்கிறார் மத்திய மந்திரி.
அமித்ஷா மதுரைக்கு வந்தபோது தி.மு.க. ஆட்சியில் குறை சொல்லி ஆத்திரத்தை கொட்டித் தீர்த்துள்ளார். அறிவிப்பு மட்டுமே வெளியிட்டு செயல்படுத்தாமல் உள்ளதாக தி.மு.க. அரசை குற்றம்சாட்டியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலை என்ன? 2 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடித்திருக்கலாம். எய்ம்ஸ் மருத்துவமனையை பத்தாண்டுகளாக கட்டுவதற்கு அது மருத்துவமனையா அல்லது விண்வெளி ஆராய்ச்சி நிலையமா? மதுரை வந்த அமித்ஷா எய்ம்ஸ் நிலை குறித்து நேரில் போய் பார்த்தாரா?
ஏராளமான தரவுகளுடன் கொடுக்கப்பட்ட கீழடி ஆய்வறிக்கையை திருத்த வேண்டும் என்று மத்திய அரசு சொல்கிறது. கீழடி அறிவியல் ஆய்வில் எழுதப்பட்ட அறிக்கையை போதவில்லை என கூறுகிறார் மத்திய மந்திரி செகாவத். தமிழர்களின் தொன்மையை அழிக்கவும், மறைக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோன போது எடப்பாடி பழனிசாமி வாய் திறந்து கேள்வி கேட்டாரா? டெல்லிக்கு தலையாட்டி பொம்மையாக அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.”
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.