தென்காசியில் ரசாயண பவுடரில் பால் தயாரித்து விற்ற 3 பேர் கைது
1 min read
3 arrested for selling milk made with chemical powder in Tenkasi
13.6.2025
தென்காசி பகுதியில் பாலில் ரசாயன பவுடரை சேர்த்து அதிகமான அளவில் பாலை உற்பத்தி செய்து பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க கெமிக்கலை சேர்த்து விற்பனை செய்து வந்த கணவன் மனைவி உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் மேலப்பாவூர் குலசேகரபட்டி பகுதியைச் சேர்ந்த சண்முகவேலு என்பவரது மகன் கோமதி சங்கர் (வயது 49) இவரது மனைவி லெட்சுமி (வயது 40) இவர்கள் இருவரும் தென்காசி ரெயில் நிலையம் அருகே கடந்த மூன்று வருடங்களாக பால் கடை நடத்தி வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் ரசாயன பவுடரை தண்ணீரில் கலந்து அதிக அளவில் பாலை தயாரித்து அந்த பால் பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க ஒரு கெமிக்கலை கலந்து தென்காசி நகரில் ஏராளமான கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த தென்காசி உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் முகம்மது மற்றும் அதிகாரிகள் முப்புடாதியின் பால் கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு உண்பதற்கு தகுதியற்ற பவுடர் பாக்கெட்டுகள், தடை செய்யப்பட்டுள்ள கெமிக்கல் பொருட்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் ரசாயண பவுடரை தண்ணீரில் கலந்து தயாரிக்கப்பட்ட 100 லிட்டர் கலப்பட பாலும் இருந்தது. உடனடியாக அலற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்தப் பாலையும் அதற்கு பயன்படுத்தப்பட்ட ரசாயன பவுடர் மற்றும் கெமிக்கலை எடுத்து பரிசோதனைக்காக நெல்லைக்கு அனுப்பினர்.
மேலும் பாலில் கலப்படம் செய்து விற்பனை செய்து வந்த கோமதி சங்கர் அவரது மனைவி லட்சுமி மற்றும் இவர்களுக்கு கெமிக்கல் பொருட்களை சப்பளை செய்த மேலப்பாவூர் பகுதியை சேர்ந்த முப்புடாதி (வயது 45) ஆகிய மூன்று பேர்களையும் தென்காசி போலீசார் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களிடம் தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் ராபர்ட் ஜெயின் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே நேற்று முன்தினம் தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பகுதியில் முதியோர் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 4 பேர் உயிரிழந்த நிலையில் இன்று பாலில் கலப்படம் செய்து நகரில் உள்ள பல்வேறு கடைகளுக்கும் விற்பனை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள் வதோடு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் மற்றும் தயாரிக்கும் கடைகளில் அடிக்கடி சோதனை செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.