June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

ஜி7 நாடுகள் கடும் எதிர்ப்பு: அணு ஆயுதம் தயாரிக்க ஈரானுக்கு மட்டும் தடை ஏன்..?

1 min read

G7 countries strongly oppose: Why is Iran only banned from producing nuclear weapons?

18.6.2025
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வந்த மோதல் தற்போது முழு அளவிலான போராக வெடித்துள்ளது. இது மத்திய கிழக்கில் இருநாடுகளுக்கிடையே உருவாகும் சண்டைகளைப் போல அல்ல.. அதைவிட பலமடங்கு ஆபத்தான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் – ஈரான் இடையிலான இந்த போர் மத்திய கிழக்கில் மிகவும் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. தற்போது வரை இருநாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டிருக்கும் சூழலில் இதுவரை நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியிருக்கின்றன. தற்போது வரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பொதுமக்கள் என்பது மிகவும் துயரமான ஒன்று. உலக நாடுகள் பலவும் இந்த பதற்றத்தைக் குறைக்க தம்மால் ஆன முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.

இந்த சூழலில் அணு ஆயுதத்தை ஈரான் தயாரிக்கவே கூடாது என்று ஜி7 நாடுகள், திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.
ஆனால் இந்த அமைப்பில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களை குவித்து வைத்து இருக்கும்போது ஏன் ஈரானை மட்டும் தயாரிக்க கூடாது? என்று சொல்கிறார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் எழுகிறது.
அணு ஆயுதம் என்பது பேரழிவை ஏற்படுத்தும் ஒரு ஆயுதம் ஆகும். எனவே 1968-ம் ஆண்டு அணு ஆயுத பரவல் தடுக்கும் ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. இந்த ஒப்பந்தம் வருவதற்கு முன்பே, அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகள் அணு ஆயுதத்தை தயாரித்து விட்டன.

எனவே இந்த நாடுகளுக்கு மட்டும் அதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டு, மற்ற நாடுகள் அதில் இணைய வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டன. ஆனால் சீனாவிடம் அணு ஆயுதம் இருப்பதால், இந்தியா நாங்கள் கட்டாயம் அணு ஆயுதங்கள் தயாரிப்போம் என்று கூறி, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டது.
நம்மை காரணம் கூறி பாகிஸ்தானும் அதில் கையெழுத்து போடவில்லை. இஸ்ரேல் ஆரம்பத்திலேயே இதனை மறுத்துவிட்டது. வடகொரியா இந்த ஒப்பந்தத்தை முதலில் ஏற்றுக்கொண்டு 2003-ல் அதில் இருந்து விலகி விட்டது. மற்ற உலக நாடுகள் அனைத்தும் அதில் கையெழுத்து போட்டுள்ளன.
தற்போதைய நிலையில் ரஷியாவிடம் 5,459, அமெரிக்காவிடம் 5,177 என்ற அதிக எண்ணிக்கையிலும், அதற்கு அடுத்தபடியாக பிரான்ஸ் 290, இங்கிலாந்து 225, சீனா 600, இந்தியா 190, பாகிஸ்தான் 180, இஸ்ரேல் 90, வடகொரியா 50 ஆகிய எண்ணிக்கையில் அணு ஆயுதங்கள் இருக்கின்றன.
ஈரானை பொறுத்தவரை அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. அதன் காரணமாக அமெரிக்கா, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக ஈரானுக்கு அணு ஆயுத செறிவூட்டல் உதவிகளை வழங்கியது.
ஆனால் 1978-ம் ஆண்டு ஈரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு அமெரிக்கா-ஈரான் உறவில் முறிவு ஏற்பட்டு அணுசக்தி உதவியில் இருந்து அமெரிக்கா பின்வாங்கியது. இருந்தாலும், ஈரான், தன்னிச்சையாக தனது அணுசக்தி திட்டத்தை விரிவாக்க தொடங்கியது. ஆனால் ஈரான் அணுவை ஆயுதமாக மாற்றுகிறதா? என்று உலக நாடுகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எனவே அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகள் மட்டும் இணைந்து ஈரானுடன் ஒரு புதிய அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தை 2015-ம் ஆண்டு செய்து கொண்டன. அதில் ஈரான் கையெழுத்திட்டதால், அந்த நாடு மீது ஏற்கனவே விதிக்கப்பட்டு இருந்த அனைத்து பொருளாதார தடைகளும் விலக்கி கொள்ளப்பட்டன.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டும் செயல்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். சர்வதேச அணு அயுத முகமையை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும். அணு ஆயுதம் உருவாக்கவே கூடாது என்று கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா மட்டும் 2018-ம் ஆண்டு தன்னிச்சையாக விலகியது.

அதாவது ஒப்பந்தத்தை மீறி, ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. அதனை உறுதி செய்யும் வகையில் 2020-ம் ஆண்டு முதல் ஈரான் சர்வதேச அணு அயுத ஏஜென்சியின் ஆய்வுக்கு அனுமதி மறுத்தது. அதனால் ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்க தொடங்கிவிட்டது என்று உலக நாடுகள் உறுதி செய்து விட்டன.

ஈரானை மட்டும் ஏன் தயாரிக்க கூடாது? என்பதற்கு பல்வேறு காரணங்களை ஜி7 நாடுகள் கூறுகின்றன. அதாவது ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்து போட்டு விட்டு அதனை மீறுவது முற்றிலும் தவறு. மேலும் ஈரான் ஒரு ஜனநாயக நாடு இல்லை. ஈரான் அரசு இஸ்புல்லா மற்றும் ஹமாஸ் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கிறது.

இந்த அமைப்புகள் இஸ்ரேல் மட்டுமின்றி சவுதி அரேபியாவிலும் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். ஈரான் அணு அயுதம் தயாரிக்க அனுமதிக்கக்கூடாது என்று இஸ்ரேல் மட்டுமல்ல, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சில மத்திய கிழக்கு நாடுகள் திரைக்கு பின் தீவிரமாக எதிர்க்கின்றன.

அதோடு பயங்கரவாத அமைப்புகளுக்கு அணு ஆயுதம் சென்றுவிட்டால் உலகை பேரழிவுக்கு கொண்டு சென்றுவிடும் என்று காரணம் சொல்கின்றனர்.

ஆனால் ஈரானை பொறுத்தவரை அணு ஆயுதங்களை தடுக்க விரும்புகிறோம் என்று நீங்கள் சொன்னால், உலகம் முழுவதும் ஒருமித்த போக்குடன் நடக்க வேண்டும். ஒருவருக்கு உரிமை, மற்றொருவருக்கு தடை என்றால், அது நியாயம் அல்ல. இஸ்ரேல் அணு ஆயுதம் வைத்திருக்கும்போது, நாங்கள் ஏன் தயாரிக்க கூடாது என்று கேள்வி எழுப்புகிறது.

இஸ்ரேலின் தாக்குதலையும், ஆக்கிரமிப்புகளையும் அணு ஆயுதங்கள் இன்றி தடுக்க முடியாது என ஈரான் மிக உறுதியாக நம்புகிறது.

ஈரானின் மிக முக்கிய ராணுவ தலைவர்கள், அணு ஆயுத விஞ்ஞானிகள், உயர்மட்ட ஜெனரல்கள் போன்றோர் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மிக முக்கியமாக ஈரான் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளது. எனவே, இந்த இழப்பு ஈரானின் போர் உத்தியை மாற்றலாம் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்.

சரியான கட்டமைப்புகளும், சரியான பிரதிநிதிகளும் இல்லாமல் இஸ்ரேலின் கடுமையான தாக்குதலை ஈரான் எப்படிச் சமாளிக்கும் என கேள்வி எழுப்பும் அவர்கள், ஈரானின் எதிர்கால மற்றும் நம்பகமான தடுப்பாக அணு ஆயுதங்களாகத்தான் இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.