ஏர் இந்தியா 3 அதிகாரிகள் பணியில் இருந்து விடுவிக்க மத்திய அரசு உத்தரவு
1 min read
Central government orders removal of 3 Air India officials for irresponsible behavior
21.6.2025
பொறுப்பின்றி செயல்பட்ட அதிகாரிகள் மூவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏர் இந்தியா நிறுவனத்துக்கு, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டு உள்ளது.
குஜராத்தின் ஆமதாபாதில் நடந்த ‘ஏர் இந்தியா’ விமான விபத்தில், 241 பேர் உயிரிழந்தனர். விமானம் மோதிய கல்லுாரி விடுதியில் மருத்துவ மாணவர்கள் ஐந்து பேர் உட்பட 29 பேர் பலியாகினர். இந்த விபத்து விமான பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், விமான விபத்தின் எதிரொலியாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகின்றன. மத்திய அரசு, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உள்ளிட்ட அதிகாரிகள், ஏர் இந்தியா அலுவலர்களின் செயல்பாடுகளை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினர்.
இதில் குறிப்பிட்ட மூன்று அதிகாரிகள், தொடர்ந்து விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. கோட்ட துணை மேலாளர் சூரா சிங், பணி ஒதுக்கீடு செய்யும் பிரிவு தலைமை மேலாளர் பிங்கி மித்தல், திட்டமிடுதல் பிரிவு அதிகாரி பாயல் அரோரா ஆகியோர் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர்.
பணி ஒதுக்கீடு செய்தல், விதிமுறைகளை கடைப்பிடித்தல், பணியில் பொறுப்புடன் செயல்படுதல் ஆகியவற்றில் கவனமின்றி செயல்பட்டதாகவும், விதிகளை மீறியதாகவும் இவர்கள் கண்டறியப்பட்டனர்.
”பணி நேரத்தில் கவன குறைவாக செயல்பட்ட அந்த மூன்று அதிகாரிகளையும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்க வேண்டும். உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
”மே 16,17ம் தேதிகளில் பெங்களூரிலிருந்து லண்டனுக்கு சென்ற, இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் (Al133) 10 மணி நேரத்தில் சென்று அடைவதற்கு, பதில் கூடுதல் நேரம் ஆகி உள்ளது.
இது குறித்து விமான நிறுவனத்தின் பொறுப்பு அதிகாரிக்கு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கான காரணத்தை 7 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.