4 மாநில இடைத்தேர்தல்: குஜராத், பஞ்சாப்பில் ஆம்ஆத்மி வெற்றி
1 min read
4 state by-elections: Aam Aadmi Party wins in Gujarat, Punjab
23.6.2025
கடந்த ஜூன் 19ம் தேதி கேரளாவின் நிலம்பூர் தொகுதிக்கும், மேற்கு வங்கத்தின் கலிகஞ்ச் தொகுதிக்கும், பஞ்சாப்பின் லூதியானா மேற்கு தொகுதிக்கும், குஜராத்தின் விசவதார் மற்றும் காதி தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. மேற்குவங்கம் மற்றும் கேரளாவுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த இடைத்தேர்தலை அனைத்து கட்சிகளும் முன்னோட்டமாக பார்க்கின்றன.
காலை 8 மணிக்கு தொடங்கிய ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன.
நிலம்பூர்
கேரளாவின் நிலம்பூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஆர்யதன் ஷூகாத் ஆரம்ப முதலே முன்னிலையில் இருந்தார். ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை விட 11,077 ஓட்டுகள் வித்தியாசத்தில் பெற்றார். மொத்தமாக அவர் 77,737 ஓட்டுகளை வாங்கியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் 66,660 ஓட்டுகளையும், சுயேட்சையாக போட்டியிட்ட அன்வர் 19,760 ஓட்டுகளையும் பெற்றனர். பா.ஜ., 8.648 ஓட்டுகளை மட்டுமே பெற்று 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
நிலம்பூர் தொகுதி காங்., எம்.பி., பிரியங்காவின் வயநாடு லோக்சபா தொகுதிக்குள் வருவதால், இந்தத் தேர்தல் முடிவு காங்கிரசுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
லூதியானா மேற்கு
டெல்லி சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஆம்ஆத்மி போட்டியிடும் முதல் தேர்தல் இதுவாகும். இந்தத் தொகுதியை மீண்டும் கைவசப்படுத்த ஆம்ஆத்மி போராடியது. அதன்படி, ஆம்ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோரா 30,237 ஓட்டுகளைப் பெற்ற வெற்றி பெற்றார். 8,697 ஓட்டுகள் வித்தியாசமாகும். காங்கிரஸ் வேட்பாளர் பாரத் பூசன் அஷூ 21,540 ஓட்டுகளும், பா.ஜ., வேட்பாளர் ஜீவன் குப்தா 17,435 ஓட்டுகளையும் பெற்றனர்.
குஜராத்
விசாவதர் தொகுதியில் ஆம்ஆத்மி சார்பில் போட்டியிட்ட பூபேந்திர பயானி, கடந்த 2023ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.க,வில் இணைந்து விட்டார். எனவே, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 2007ம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியை பா.ஜ.க, வென்றதே இல்லை. எனவே, இந்த முறை எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று கிர்த்தி படேலை பா.ஜ.க, களமிறக்கியது. ஆம்ஆத்மி சார்பில் கோபால் இதாலியாவை நிறுத்தியது.
ஓட்டு எண்ணிக்கையில் பா.ஜ.க, – ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், ஆம்ஆத்மி வேட்பாளர் கோபால் இதாலியா 75,942 ஓட்டுகளை பெற்றார். இதன்மூலம், 17,554 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பா.ஜ.க, வேட்பாளர் கிர்த்தி படேல் 58,388 ஓட்டுகளும், காங்கிரஸ் வேட்பாளர் 5,501 ஓட்டுகளையும் பெற்றுள்ளனர். இதன்மூலம், விசாவதர் தொகுதி மீண்டும் ஆம்ஆத்மி வசம் சென்றது.
அதேபோல, காதி தொகுதி பா.ஜ.க, எம்.எல்.ஏ., கர்சன் சோலாங்கி மறைவை தொடர்ந்து, இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தனி தொகுதியான காதியில் பா.ஜ.க, சார்பில் ராஜேந்திர சவாடா போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில் ரமேஷ் சவாடாவும், ஆம் ஆத்மி சார்பில் ஜெக்தீஷ் சவாடாவும் களமிறங்கினர். ஓட்டு எண்ணிக்கை முடிவில் பா.ஜ.க.வின் ராஜேந்திரகுமார் சவாடா 39,452 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 99,742 ஓட்டுகளை வாங்கினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் சவாடா, 60,290 ஓட்டுகளையும், ஆம் ஆத்மி வேட்பாளர் ஜெகதீஷ் சவாடா 3,090 ஓட்டுகளையும் பெற்றார்.
கலிகஞ்ச்
திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-, நசாருதின் அகமது மறைவை தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அவரது மகள் ஆலிபா அகமது திரிணமுல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார். அவர் மொத்தம் 56,566 ஓட்டுகளைப் பெற்றார். பா.ஜ., வேட்பாளர் ஆஷிஷ் கோஷை (25,412 ஓட்டுகள்)விட 31,154 ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் கபில் உதின் 19,102 ஓட்டுகளை பெற்றார்.