குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம்-குளிக்கத் தடை
1 min read
Flooding at all waterfalls in Courtallam – bathing prohibited
26.6.2025
குற்றாலத்தில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகஅளவில் கொட்டுகிறது . இதனால் அனைத்து அருவிகளிலும் இந்த மூன்று நாட்களாக குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலம் ஆகும். சீசன் காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பொழியும். இதமான தென்றல் காற்று தொடர்ந்து வீசும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் அவ்வப்போது பெய்யும் சாரல் காரணமாக மரங்களும், தாவரங்களும் பசுமையாக காணப்படும்.
குற்றாலம் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.இந்த அருவிகளில் குளிப்பதால் உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் இதனால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிந்து இரவும் பகலுமாக குளித்து வருகின்றனர்.
இந்நிலையில் குற்றாலத்தில் பெய்து வரும் தொடர் சாரல் மழையினால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி புலியருவி சிற்றருவி உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் வெள்ளமென கொட்டுகிறது.இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் சுற்றாலத்தில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
குற்றாலத்தில் தொடர்ந்து பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் குற்றாலம் மேக்கரை தென்மலை பகுதிகளில் உள்ள தனியார் அருவிகளுக்கு சென்று அதிக அளவில் பணம் கொடுத்து குளித்து வருகின்றனர்.
குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர் இதனால் தென்காசி குற்றாலம் செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் குற்றாலத்தில்அனைத்து அருவிப்பகுதிகளிலும் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.