“தி.மு.க. ஆட்சியில் 23 பேர் போலீஸ் விசாரணையில் சாவு” – அண்ணாமலை குற்றச்சாட்டு
1 min read
“I won’t give up until I get justice..” – Annamalai Aavesam
29.6.2025
முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 29 வயது இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலையை மூடிமறைக்கும் வேலையில், காவல்துறையினரும், அந்தப் பகுதி திமுகவினரும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் திமுகவினர், போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் திமுகவினர் யாரும், காவல்துறை விசாரணையின்போது தாக்கப்படுவதில்லை. ராஜமரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். சிறு சிறு குற்றங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் அப்பாவிகளைக் காவல்துறை விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்குவது, திமுக ஆட்சியில் மிகவும் அதிகரித்துள்ளது.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து, 23 பேர் காவல்துறை விசாரணையின்போது மரணமடைந்துள்ளனர். ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பான முதல்-அமைச்சர், இது குறித்து எந்தக் கவலையுமின்றி இருக்கிறார்.
தமிழகத்தில், ஆளுங்கட்சியினர், அமைச்சர்களின் நண்பர்கள் குற்றம் செய்தால், அவர்களைக் காப்பாற்ற, பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் திமுக அரசு, ஏழை எளிய மக்கள் என்றால், அவர்கள் உயிர் போனாலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
உடனடியாக, திருப்புவனம் இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகப் போராடும் திருப்புவனம் மக்களோடு நாங்கள் துணை நிற்கிறோம். உயிரிழந்த இளைஞர் அஜித் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் விடப்போவதில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாக தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மடப்புரம் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமாரை விசாரணை எனும் போர்வையில் அழைத்துச் சென்று, 7 காவலர்கள் இணைந்து 2 நாட்களாக அடித்துத் துன்புறுத்தியதால் அவர் உயிரிழந்ததாக உறவினர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இது லாக்-அப் மரணமோ என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்புகிறது.
கடந்த வாரம் பாலியல் தொல்லை குறித்து புகாரளிக்க வந்த கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் தாக்கிய நிலையில், தற்போது தன்னையும் தன் சகோதரரையும் வண்டியில் அழைத்து செல்லும் வேளையிலும் பின்னால் கயிறு கட்டி தாக்கியதாக உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் வாக்குமூலம் அளித்திருப்பது காவல்துறையின் அதிகரித்துவரும் குரூரப் போக்கை வெளிப்படுத்துகிறது.
திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகி உள்ளது. காவல்துறையின் அராஜகப் போக்கிற்கு மேலும் பல உயிர்கள் பலியாகும் முன், சட்டம் ஒழுங்கை தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக இவ்விசயத்தில் தீவிர விசாரணை நடத்தி, உயிரிழந்தவரின் இறப்புக்கு தக்க நியாயம் பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.