கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்
1 min read
Former Kerala Chief Minister Achuthanandan’s health condition is very critical
1.7.2025
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் அச்சுதானந்தன். கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை கேரள மாநில முதல்-மந்திரியாக இருந்த இவருக்கு தற்போது 101 வயது ஆகிறது.
81 வயதில் முதல்-மந்திரியாக பதவியேற்றது, கேரள சட்டசபையில் 15 ஆண்டுகள் எதிர்க்கட்சி தலைவராக இருந்தது உள்ளிட்ட பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரரான இவர் வயதுமூப்பு காரணமாக கடந்த சில ஆணடுகளாகவே அரசியலில் இருந்து விலகி இருந்தார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 23-ந்தேதி அச்சுதானந்தனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்பட்ட அவருக்கு இதயவியல், நரம்பியல், சிறுநீரகவியல் மற்றும் பல்வேறு துறை மருத்துவர்கள் இணைந்து சிகிச்சை அளித்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்ற அச்சுதானந்தனின் உடல்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. பின்பு மீண்டும் உடல்நிலை சீராவதில் பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் அச்சுதானத்தனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மாநில அரசால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்குழு, அச்சுதானந்தனுக்கு பல உள் உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
அவரது ரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு, இதய செயல்பாட்டை சீராக்கும் முயற்சியில் மருத்துவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவருடைய உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.