July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் 7 பேர் சாவு

1 min read

6 people die in explosion at cracker factory near Sivakasi

1.7.2026
சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னகாமன் பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று (ஜூலை 01) தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 அறைகள் தரைமட்டமாகின.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனை முன்பு குவிந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (01.07.2025) காலை சுமார் 8.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், மீனம்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம் (வயது 55) த/பெ.ராமசாமி, அனுப்பன்குளத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டியன் த/பெ.சின்னையா, மத்தியசேனையைச் சேர்ந்த லட்சுமி க/பெ.கருப்பசாமி, விருதுநகர் வட்டம், ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி (வயது 38) த/பெ.ராம்ராஜ், சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த ராமஜெயம் (வயது 27) த/பெ.கந்தசாமி மற்றும் சூலக்கரையை சேர்ந்த வைரமணி (வயது 32) த/பெ. காந்தி ஆகிய ஆறு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வரும் லிங்குசாமி (வயது 45), மணிகண்டன் (வயது 40), கருப்பசாமி (வயது 27), முருகலட்சுமி (வயது 48) மற்றும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அழகுராஜா (வயது 28) ஆகிய ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.