அஜித்குமார் மரணம்: கைதான 5 போலீசாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
1 min read
Ajith Kumar’s death: 5 arrested policemen remanded in 15-day judicial custody
1.7.2025
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 28). தங்க நகை திருட்டு வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் மதுரை ஐகோர்ட்டு கூடுதல் பதிவாளர் ஜெனரல் (நீதித்துறை), நிர்வாக நீதிபதியின் தனி செயலாளர் ஆகியோருக்கு மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் ஆர்.ஏ.எஸ்.செந்தில்வேல் நேற்று முன்தினம் தபாலில் ஒரு மனு அனுப்பி இருந்தார்.
அந்த மனுவில், “மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாரின் மரணம், இந்த சமூகத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியையும் உலுக்கும் விதமாக அமைந்து உள்ளது. அவர் சித்ரவதை செய்து கொல்லப்பட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன. போலீஸ் விசாரணைக்கு சென்றபோது ஏற்பட்ட சித்ரவதையால் அவர் இறந்துள்ளார் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.
இதுதொடர்பாக அதிகாரிகள் முன்வைத்த விளக்கம் முரண்பாடாகவும், நம்பகத்தன்மை இல்லாமலும் உள்ளது. இது குற்றவாளிகளை பாதுகாக்கும் முயற்சியாக தெரிகிறது. சில ஆண்டுகளாக போலீஸ்நிலைய மரணங்கள் தொடர்கின்றன. காவல் மரணங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றம் என ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்குகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.