July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

அஜித்குமார் மரணம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

1 min read

Ajith Kumar’s death: CBI inquiry ordered

1.7.2025
திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த 28-6-2025 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவர், திருப்புவனம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன்.
இது யாராலும் நியாயப்படுத்தப்பட முடியாத, காரணம் சொல்லித் தப்பிக்க முடியாத செயல். இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாகச் சம்பவம் நடந்த அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இத்தகைய வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளின்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
நேற்றைய தினம் , 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கும் மாற்றப்பட்டது.
இன்று(ஜூலை 1) சம்பந்தப்பட்ட மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். துணைக் கண்காணிப்பளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்படி சட்டபூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்துக்கப்பட்டு வருகிறது.
துயர மரணத்தை அடைந்துள்ள அஜித்குமாரின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு நான் பேசினேன். நடைபெற்ற துயரச் சம்பவத்திற்கு எனது வருத்தத்தை அவர்களிடம் தெரிவித்தேன்.
நியாயமான, ஒளிவுமறைவற்ற, எவ்வித பாரபட்சமுமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அஜித்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளேன்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இவ்வழக்கில் சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்தச் சம்பவத்தில் காவல் துறையைச் சேர்ந்த ஐவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிடுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும்.
காவல்துறையினர் தங்களது விசாரணையின்போது மனித உரிமையைக் காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நான் பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன். இதுபோன்ற மீறல் சம்பவங்களை நான் எப்போதும் ஏற்றுக்கொள்வது இல்லை.
திருப்புவனத்தில் சில காவலர்கள் செய்த செயல், மன்னிக்க முடியாதது. இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும் எங்கும் யாராலும் நடந்துவிடக் கூடாது என்பதை எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன்.
தங்களுடைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்திடும் என நம்பி காவல்துறையை நாடி வரும் பொதுமக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றிடும் வகையில் காவல்துறை எப்போதும் செயல்பட வேண்டும்”
இவ்வாறு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.