டிரம்பின் வரி மசோதா நிறைவேறினால் புதிய அரசியல் கட்சி-எலான் மஸ்க் உறுதி
1 min read
Elon Musk confirms new political party if Trump’s tax bill passes
1.7.2025
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள வரி மற்றும் செலவு மசோதாவுக்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையே இந்த மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து எலான் மஸ்க் தனது அதிருப்தியை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, “வரி மற்றும் செலவு மசோதா, வரலாற்றில் மிகப்பெரிய கடன் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இந்த மசோதாவுக்கு வாக்களித்த ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் வெட்கத்தால் தலைகுனிய வேண்டும். குடியரசு கட்சி உறுப்பினர்கள் இந்த பூமியில் செய்யும் கடைசி விஷயம் இதுவாக இருந்தால் அடுத்த ஆண்டு தங்கள் முதன்மைத் தேர்தலை இழப்பார்கள்.
இந்த பைத்தியக்காரத்தனமான செலவு மசோதா நிறைவேறினால், அடுத்த நாள் புதிய கட்சி உருவாகும். மக்களுக்கு உண்மையில் ஒரு குரல் இருக்க வேண்டும் என்பதற்காக நமது நாட்டிற்கு ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சிக்கு மாற்றாக ஒரு கட்சி தேவை. அமெரிக்காவில் புதிய கட்சியை தொடங்க வேண்டிய நேரம் இதுவாகும் என்றார்.
ஏற்கனவே அமெரிக்க கட்சி என்ற புதிய கட்சியை தொடங்குவேன் என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.