அஜித்குமார் கொலை வழக்கில் அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை- நீதிபதிகள் குற்றச்சாட்டு
1 min read
Judges allege that government’s actions in Ajith Kumar murder case are insufficient
1.7.2025
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணமடைந்தது தொடர்பான பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், மரியா கிளீட் ஆகியோர் அமர்வு முன்பாக இன்று(ஜூலை 1) காலை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் தமிழக காவல்துறையிடம் பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.
திருட்டு வழக்கில் விசாரணை என்ற பெயரில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார், புலனாய்வு செய்யத்தானே காவல் துறை இருக்கிறது அடிப்பதற்காகவா காவல்துறை இருக்கிறது? என நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
தொடர்ந்து இன்று பிற்பகல் நடைபெற்ற விசாரணையில், அஜித்குமாரின் உடற்கூராய்வு அறிக்கையை மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வர் நேரில் ஆஜராகி தாக்கல் செய்தார். அதேபோல மடப்புரம் கோயில் சிசிடிவி காட்சிகளை உதவி ஆணையர் தாக்கல் செயதார்.
இதனைப் பார்த்த நீதிபதிகள், “பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது. அஜித் குமாரின் உடலில் 44 காயங்கள் உள்ளன. அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது அறிக்கையில் தெரிகிறது. உடலின் ஒரு பாகம் விடாமல் தாக்கப்பட்டுள்ளார். இது சாதாரண கொலை வழக்கு இல்லை. மரக்கட்டை, இரும்பு கொண்டு தாக்கப்பட்டுள்ளார். காதில் ரத்தம் வரும் அளவுக்கு அடித்துள்ளனர்.
மாநிலம் தனது குடிமகனையே கொலை செய்துள்ளது. யார் சொல்லி இப்படி செய்தீர்கள்? இவர்களை எல்லாம் இயக்கியது யார்? இதற்கு காரணமான காவல்துறை உயர் அதிகாரிகளை உடனடியாக அரசு, இடைநீக்கம் செய்ய வேண்டும். சிறப்புக்குழு நடவடிக்கையை கண்காணிக்க தவறியவர்கள் மீதும் நடவடிக்கை தேவை.
கோயிலில் சிசிடிவி காட்சிகள் எடுத்ததாக காவல்துறை அறிக்கையில் இல்லை. சம்மந்தப்பட்ட இடங்களில் சாட்சியங்களை சேகரித்து யார்?
குற்றம் நடைபெற்ற இடத்தில் ரத்தக்கறை என்ன ஆனது? சாட்சியங்களை பாதுகாக்கத் தவறியது ஏன்? அஜித் தாக்கப்பட்டது சிசிடிவியில் பதிவாகியுள்ளதா?” என நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், “போலீசார் கூட்டாக சேர்ந்து இந்த கொடூரமான செயலைச் செய்துள்ளனர். இளைஞரின் பிறப்புறுப்பிலும் வாயிலும் மிளகாய்ப் பொடியை போட்டு அடித்து சித்திரவதை செய்துள்ளனர். சில சாட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன.
அஜித்குமார் கொலை வழக்கில் அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அரசு உறுதி கூறியுள்ளது. வருங்காலங்களில் எந்த இடத்திலும் காவல்துறையினர் இதுபோல நடந்து கொள்ளக்கூடாது. கல்வியறிவு அதிகமுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலத்தில், இதுபோன்ற நிகழ்வு ஆபத்தானது. சாத்தான்குளம் சம்பவத்தை யாரும் மறக்க முடியாது.
இது தொடர்பான விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு 2 நாள்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது” என்று கூறி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.