ஆதார் மூலம் தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது
1 min read
Tatkal train ticket booking process through Aadhaar comes into effect
1.7.2025
ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்தியன் ரெயில்வே உணவு சுற்றுலா கழகத்தின் இணையதளத்தில், ரெயில் டிக்கெட்டுகளை பயணியர் முன்பதிவு செய்து வருகின்றனர். பயணத்துக்கு, ஒருநாள் முன்பு டிக்கெட் எடுக்கும் முறை, ‘தட்கல்’ எனப்படுகிறது. பெரும்பாலும், இந்த தட்கல் டிக்கெட் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால், பயண ஏஜண்டுகளுக்கு மட்டும் எளிதாகக் கிடைக்கிறது.
ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணையதளத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிப்போர், ‘சர்வர்’ முடக்கம், தொழில்நுட்பக் கோளாறு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். தட்கல் டிக்கெட் முன்பதிவில், ஏஜன்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமுள்ளது. அவர்களிடம் பல மடங்கு பணம் கொடுத்து, அவசரத்துக்கு, மக்கள் டிக்கெட் வாங்குகின்றனர். ஏராளமான போலி கணக்குகளை துவங்கி, தட்கல் டிக்கெட்டுகளை ஏஜன்ட்டுகள் வாங்குவதும் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், 3.5 கோடி போலி கணக்குகளை ஐ.ஆர்.சி.டி.சி., முடக்கி உள்ளது.
அதேவேளையில், வருகிற 1-ந் தேதி (இன்று) முதல் ஆதார் ஓ.டி.பி. அடிப்படையில் மட்டுமே தட்கல் முன்பதிவு டிக்கெட்டுகளை பெற முடியும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்குகளை வைத்துள்ள பயனாளர்கள் தங்களது ஆதாரை இணைக்க ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது. இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம், ஒவ்வொருவருக்கும் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பி உள்ளது. அதன்படி, ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களது யூசர் ஐ.டி. (பயனாளர் கணக்கு) மற்றும் பாஸ்வேர்டு மூலம் ஐ.ஆர்.சி.டி.சி. முன்பதிவு இணையதளத்துக்குள் சென்று ‘மை அக்கவுன்ட்’ என்ற தலைப்பின் கீழ் இருக்கும் ‘ஆத்தென்டிகேட் யூசர்’ (பயனாளரை அங்கீகரிக்கவும்) என்பதை தேர்வு செய்து ஆதார் அட்டையில் இருப்பது போன்று பெயரை பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்ததும், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போனுக்கு ஓ.டி.பி. அனுப்பப்படும். அந்த ஓ.டி.பி.யை பதிவு செய்ததும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்துடன் ஆதார் இணைக்கப்படும். ஆதார் அட்டையில் இருக்கும் பெயரும், இணையதளத்தில் பதிவு செய்யும் பெயரும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே ஆதார் இணைக்கப்படுகிறது. கடைசி நேர சிக்கலை தவிர்க்க பயனாளர்கள் தங்களது இணையதள கணக்குடன் ஆதாரை முன்கூட்டியே இணைக்க ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் ஆதார் மூலம் தட்கல் rஎயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை இன்று(ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.