July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

அஜித்குமார் விவகாரத்தில் தூண்டிய இந்திய ஆட்சிப்பணி அதிகாரி யார்? – அன்புமணி கேள்வி

1 min read

Who was the Indian Civil Service officer who instigated the Ajith Kumar affair? – Anbumani questions

2.7.2025
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையானது என்று போற்றப்பட்ட தமிழக காவல்துறையை, அதிகாரம் படைத்த சிலருக்கான அடியாள் படையாக செயல்பட வைத்து, அப்பாவி இளைஞர் ஒருவரின் கொலைக்கு காரணமாக இருந்த திமுக அரசு, அந்தப் பழியிலிருந்து தப்புவதற்காக பல்வேறு தகிடுதத்தங்களை செய்து வருகிறது. சொந்த மக்களையே படுகொலை செய்யும் திமுக அரசு என்னதான் நாடகமாடினாலும், கொடூரத்தின் சின்னமாக அதன்மீது படிந்திருக்கும் இரத்தக் கறையை போக்க முடியாது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையக் காவலர்களால் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் அடுத்தடுத்து திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி வருகின்றன. திமுக அரசில் காவல்துறை எவ்வாறு கூலிப்படையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை இந்தப் படுகொலை உறுதி செய்துள்ளது.

நகைத்திருட்டு தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தால் கூட, அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது கிடையாது. ஆனால், திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கோவிலுக்கு வந்த சிலர், அவர்களின் மகிழுந்தில் வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போய்விட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து, அவர்களிடம் புகாரைப் பெற்று வழக்குப் பதிவு கூட செய்யாத காவல்துறையினர், அஜித்குமார் உள்ளிட்ட சிலரை சட்டவிரோதமாக பிடித்துச் சென்று அவர் பணியாற்றிய கோவிலிலும், வேறு இடங்களிலும் வைத்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

அதற்கான காரணம் நகையை இழந்த பெண்கள், மூத்த இ.ஆ.ப. அதிகாரி ஒருவரின் உறவினர்கள் என்பது தான். அதாவது அதிகாரத்தில் இருப்பவர்கள் கட்டளையிட்டால் அப்பாவி மக்களை விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்து கொலை செய்யும் படையாகவே தமிழக காவல்துறை செயல்பட்டு வருகிறது. இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது. இது நியாயமா?

அஜித்குமாரை விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்திய காவலர்கள், மனித மிருகங்களாகவே மாறியிருக்கின்றனர். அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள் இருந்ததாக இடைக்கால உடற்கூறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. கை, கால்களில் தொடங்கி உச்சந்தலை வரை காயங்கள் உள்ளன.

விசாரணையின் போது வாயில் 5 முறை மிளகாய் பொடியைத் தூவி அடித்துள்ளனர்; அந்தரங்க உறுப்புகளிலும் மிளகாய் பொடியைக் கொட்டி கொடுமைப்படுத்தப்பட்டிருப்பதாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த அளவுக்கு கொடூரங்களை நிகழ்த்த வேண்டும் என்றால், அதற்கான ஆணை காவல்துறையில் உயர் நிலையிலிருந்து தான் வந்திருக்க வேண்டும்.

அப்படியானால், அந்த ஆணையை வழங்கிய அதிகாரி யார்? அஜித்குமாரை நன்கு அடித்து விசாரிக்கும்ப்டி ஆணையிட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன்?

கொலை செய்வதை விட அதை மூடி மறைக்க முயல்வது பெருங்குற்றம். அந்தக் குற்றத்தை ஆளும் திமுகவே செய்திருக்கிறது. சிவகங்கை திமுக மாவட்ட நிர்வாகி சேங்கை மாறன் தலைமையிலான குழுவினர் அஜித்குமாரின் குடும்பத்தினருடன் பேசி ரூ.50 லட்சம் வரை பணம் கொடுப்பதாகவும், இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் பேரம் பேசியிருக்கிறார்.

இந்த விவரங்கள் உயர்நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் எந்த நேரமும் அஜித்குமாரின் வீட்டிலேயே முகாமிட்டிருந்து, அங்கு வரும் யாரிடமும் சுதந்திரமாக பேச முடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகச் சென்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளரும் பல வகைகளில் தடுக்கப்பட்டிருக்கிறார். கொலைக் குற்றத்தை மறைக்க திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது தமிழக காவலதுறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

அதிகாரம் படைத்தவர்களின் கூலிப்படையாக காவல்துறை செயல்பட அனுமதித்தது, அப்பாவி இளைஞர் விசாரணை என்ற பெயரில் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கைப் பார்த்தது, கொலையை மறைக்க முயன்றது என ஏராளமான தவறுகளையும், குற்றங்களையும் செய்த தமிழக அரசு, இப்போது இளைஞர் குடும்பத்திற்கு சில உதவிகளை செய்து அனைத்தையும் மூடி மறைக்கத் துடிக்கிறது. இது நடக்காது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மீது படிந்துள்ள இரத்தக் கறை ஒருபோதும் விலகாது.

அப்பாவி இளைஞரை அடித்து விசாரணை நடத்தத் தூண்டிய இந்திய ஆட்சிப் பணி அதிகாரி யார்? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்; இதில் தொடர்புடைய காவல்துறை உயரதிகாரிகள் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுவதுடன், கைதும் செய்யப்பட வேண்டும்; கொலை செய்யப்பட்ட இளைஞர் குடும்பத்திற்கு அரசால் வழங்கப்பட்ட உதவிகள் தவிர ரூ,.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக மக்களுடன் மனிதநேயத்துடன் பழகுவது எப்படி என்பது குறித்து காவல்துறைக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.