July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

துபாயில் பறக்கும் டாக்சி சோதனை ஓட்டம் வெற்றி

1 min read

Flying taxi test run successful in Dubai

2.7.2025
துபாயில் பறக்கும் டாக்சி சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதாக துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வீடியோ வெளியிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார். மணிக்கு அதிகபட்சமாக 322 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த பறக்கும் டாக்சி அடுத்த ஆண்டு (2026) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் சார்பில் பஸ், மெட்ரோ ரெயில், டிராம் சேவை, டாக்சி சேவை மற்றும் படகு போக்குவரத்து சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து பரிணாம வளர்ச்சியில் தற்போது துபாயில் பறக்கும் டாக்சி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
கடந்த 2024-ம் ஆண்டில் துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் சார்பில் அமெரிக்க விமான நிறுவனமான ஜோபி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு துபாயில் மின்சாரத்தால் இயங்கும் பறக்கும் டாக்சியை இயக்க முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த நிறுவனம் இ-விடோல் என்ற மின்சாரத்தால் இயங்கும் பறக்கும் டாக்சியை உருவாக்கி காட்சிப்படுத்தியது. தொடர்ந்து நடப்பு ஆண்டில் கடந்த பிப்ரவரி மாதம் இதன் மாதிரி துபாய் எதிர்கால அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 25 சதவீத தானியங்கி பயணங்களை அடைவதை நோக்கமாக கொண்ட கொள்கையின் அடிப்படையில் இந்த பறக்கும் டாக்சி வர்த்தக ரீதியில் இயக்கப்பட உள்ளது. முன்னதாக நேற்று துபாய் பாலைவன பகுதியில் முதலாவது பறக்கும் டாக்சியின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இதற்காக பாலைவன பகுதியில் பறக்கும் டாக்சி நின்று மேலெழும்ப மற்றும் தரையிறங்கும் வகையில் மைதானம் நிறுவப்பட்டது. தொடர்ந்து சோதனை ஓட்ட நிகழ்ச்சியில் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் பொது இயக்குனர் மத்தார் அல் தயார் அதிகாரிகளுடன் கலந்து கொண்டு பார்வையிட்டார். பின்னர் அந்த பறக்கும் டாக்சியில் ஏறி அமர்ந்து அதில் உள்ள சிறப்பம்சங்களை ஜோபி நிறுவன அதிகாரி விளக்கி கூறினார்.

துபாயின் முதலாவது பறக்கும் டாக்சியை விமானி ஒருவர் வெற்றிகரமாக வானில் இயக்கினார். வானில் வட்டமடித்த அந்த பறக்கும் டாக்சி மீண்டும் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது அனைவரும் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.

இந்த காட்சிகளின் தொகுப்பை வீடியோவாக தனது எக்ஸ் தளத்தில் துபாய் பட்டத்து இளவரசரும், அமீரக துணை பிரதமரும், பாதுகாப்பு மந்திரியுமான மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் பதிவிட்டார். இதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஜோபி ஏரியல் டாக்சி தனது முதலாவது சோதனை பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் மற்றும் ஜோபி ஏவியேஷன் நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இந்த சோதனை பயணம் அடுத்த ஆண்டு முழுமையான பயன்பாட்டுக்கான ஒரு முக்கிய படியை குறிப்பிடுகிறது.

மின்சாரத்தால் இயங்கும் இந்த பறக்கும் டாக்சி நகர்புற போக்குவரத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகும். இதன் மூலம் நகரில் பயண நேரம் குறைக்கப்படும். மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும். நமது நாட்டின் வான்வழி புதிய சாத்தியக்கூறுகளுக்காக திறந்து இருக்கிறது. இதை விட சிறந்த ஒன்று ஒன்னும் வரவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பறக்கும் டாக்சி ஹெலிகாப்டரை போன்று நின்ற இடத்தில் இருந்தபடியே செங்குத்தாக மேலெழும்பும் மற்றும் தரையிறங்கும். இதில் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு கட்ட சோதனைகள், தரநிலைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளன. இது ஜோபி எஸ்4 ரக டாக்சியாகும். அதிநவீன தொழில்நுட்பங்களுடன் முழுவதும் மின்சாரத்தால் இயங்க கூடியது.

இதன் காரணமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வான்வழி வாகன போக்குவரத்தாக இது அமையும். இதில் அதிக திறன் வாய்ந்த 4 பேட்டரிகள் உள்ளன. மேலும் 4 பயணிகள் மற்றும் ஒரு விமானி இதில் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியும். இந்த பறக்கும் டாக்சி மணிக்கு அதிகபட்சமாக 322 கி.மீ வேகத்தில் செல்லும். சராசரியாக 160 கி.மீ வேகத்தில் இயக்கப்படும்.
தொடக்க கட்டமாக துபாய் சர்வதேச விமான நிலையம், டவுன் டவுன், துபாய் மரினா மற்றும் பால்ம் ஜுமைரா உள்ளிட்ட முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மிக விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்கு சேரலாம்.

உதாரணமாக துபாய் விமான நிலையத்தில் இருந்து பால்ம் ஜுமைரா பகுதிக்கு காரில் செல்ல 45 நிமிடங்கள் பிடிக்கும் என்றால் பறக்கும் டாக்சியில் 12 நிமிடங்களே ஆகும். இந்த சேவை பல்வேறு பொது போக்குவரத்தை இணைக்கும் வகையில் செயல்படும்.

ஆண்டுக்கு 42 ஆயிரம் பறக்கும் டாக்சிகள் தரையிறங்கும் வசதியையும், 1 லட்சத்து 70 ஆயிரம் பயணிகளுக்கு சேவை செய்யும் திறனையும் இது பெற்றுள்ளது. நகர்புற போக்குவரத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த பறக்கும் டாக்சி சேவை அடுத்த ஆண்டு (2026) மார்ச் மாதத்திற்குள் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.