“பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை”பிரதமர் மோடி பெருமிதம்
1 min read
“4-lane highway between Paramakudi – Ramanathapuram” Prime Minister Modi is proud
2.7.2025
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 4 முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதில் ஒன்று, தேசிய விளையாட்டுக்கொள்கை-2025. 2-வது ரூ.1 லட்சம் கோடி நிதியுடன் கூடிய ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமை (ஆர்.டி.ஐ.) திட்டம். 3-வது வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம். 4-வது பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரை 4 வழிச்சாலை கட்டுமான திட்டம்.
இந்த 4 திட்டங்களுக்கும் வழங்கப்பட்ட ஒப்புதல் குறித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார்.
தமிழ்நாட்டுக்கு 4 வழிச்சாலை திட்டத்துக்கான ஒப்புதல் கிடைத்து உள்ளது. தற்போது இந்த சாலை மதுரையில் இருந்து பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி வரை தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதனோடு தொடர்புடைய மாநில நெடுஞ்சாலைகள் இணைந்த இருவழி சாலையாக உள்ளது.
இனி இது 4 வழி தேசிய நெடுஞ்சாலையாக பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரை 46.7 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,853.16 கோடி செலவில் மேம்படுத்தப்படும். இந்த விரிவாக்க சாலை 5 தேசிய நெடுஞ்சாலைகள், 3 மாநில நெடுஞ்சாலைகள், மதுரை, ராமேசுவரம் ஆகிய 2 ரெயில் நிலையங்கள், பாம்பன், ராமேசுவரம் ஆகிய 2 சிறு துறைமுகங்களை இணைப்பதாக இருக்கும். இதன் மூலம் தற்போதுள்ள போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும், சுற்றுலா, ஆன்மிகம், கலாசாரம் போன்றவை மேம்படும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
இந்த திட்டத்தின் மூலம் 8.4 லட்சம் மனித வேலைநாட்கள் நேரடியாகவும், 10.45 லட்சம் மனித வேலைநாட்கள் மறைமுகமாகவும் கிடைக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
தேசிய விளையாட்டுக் கொள்கை-2025 பற்றி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவிக்கையில், ‘இது 2001-ம் ஆண்டு கொள்கையை மாற்றி அமைக்கும் திட்டம்’ என்றார். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர்களை தயார் செய்வதற்கான முன்மாதிரி என்றும் குறிப்பிட்டார். இது விளையாட்டை பொது மற்றும் தனியார் கூட்டாண்மையில் சுற்றுலா ரீதியாக கொண்டு சென்று பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவித்தல், பெண்கள், நலிவடைந்த பிரிவினர், பழங்குடியினர் உள்ளிட்டோரை பங்கேற்க வைத்து சமூக மேம்பாட்டை அடைதல், தேசிய கல்விக்கொள்கையுடன் இணைத்து கல்வியோடு விளையாட்டை கொண்டு செல்லுதல், உலக அளவில் முன்னணி விளையாட்டு நாடாக இந்தியாவை மாற்றுதல் போன்றவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.
ஆர்.டி.ஐ. திட்டத்துக்கான ஒப்புதல் பற்றி அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதிலும், ஆராய்ச்சிப் பணிகளை வர்த்தகமயமாக்குவதிலும் தனியார் துறையின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ரூ.1 லட்சம் கோடி மூலதன நிதியுடன் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமை கண்டுபிடிப்பு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக குழுவானது இதற்கு விரிவான வழிகாட்டல் நெறிமுறைகளை வழங்கும்’ என்றார்.
இந்நிலையில் 4 வழிச்சாலை திட்டம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மகத்தான செய்தி என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மகத்தான செய்தி; பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது; இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலாவை அதிகரிக்கவும் செய்யும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.