பணம் வசூல்: சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
1 min read
Money collection: Sub-inspector, policeman suspended
2.7.2025
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதேபோல் கேரளாவின் வயநாடு, மலப்புரத்திற்கும் மாநில நெடுஞ்சாலைகள் செல்கிறது. 3 மாநிலங்களின் மையப்பகுதியாக உள்ளதால் கூடலூர் போலீசார் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இரவு பகலாக ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் சரக்கு லாரிகள் ஏராளமாக இயக்கப்படுகிறது. இதுதவிர வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். இதனால் போக்குவரத்து வாகனங்கள் அதிகளவு இயக்கும் நகரமாக கூடலூர் திகழ்கிறது. இந்த நிலையில் கடந்த வாரம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. தொடர்ந்து இதில் தொடர்புடையதாக நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுலைமான் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா விசாரணை நடத்தி வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுலைமான் மற்றும் போலீஸ்காரர் வினோத் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.