இந்திய விமானப்படை ஓடுதளத்தை சட்டவிரோதமாக விற்பனை-தாய், மகன் மீது வழக்கு
1 min read
Mother, son booked for illegally selling Indian Air Force runway
2.7.2025
இந்திய விமானப்படைக்கு சொந்தமான இடத்தை சட்ட விரோதமாக விற்பனை செய்த அதிர்ச்சி சம்பவம் பஞ்சாபில் நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தானையொட்டி அமைந்துள்ள பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகிலுள்ள பட்டுவல்லா கிராமத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமான ஓடுதளம் உள்ளது. 1962, 1965, 1971-ம் ஆண்டுகளில் நடந்த போரின்போது இந்திய விமானப்படை விமானங்களால் பயன்படுத்தப்பட்ட ஓடுதளமாகும்.
இந்த விமான ஓடுதளம் அமைந்துள்ள இடத்தை பஞ்சாபை சேர்ந்த பெண் உஷான் அன்சால், அவரது மகன் நவீன் சந்த் ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓடுதள விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பஞ்சாப் மாநில ஊழல் கண்காணிப்பு அமைப்புக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த மாதம் 20-ம் தேதி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் 28 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1997- ஆம் ஆண்டு , போலிப் பத்திரங்களை உஷா அன்சால், நவீன் சந்த் ஆகியோர் வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியுடன் தயாரித்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் இருவர் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் டிஎஸ்பி கரண் சர்மா தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விமானப்படைக்கு சொந்தமான நிலத்தையே போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.