5 நாடுகளுக்கான வெளிநாட்டு பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி
1 min read
Prime Minister Modi begins 5-nation foreign tour
2.7.2025
பிரதமர் மோடி இன்று (02-07-2025) முதல் 9-ந்தேதி வரையிலான 8 நாட்களில் பிரேசில், கானா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
இந்நிலையில் 8 நாட்கள் வெளிநாட்டுப் பயணத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கினார்.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், பிரதமரின் இந்த நீண்டகால பயணம் அமைகிறது. இதன்படி அவர் 2 கண்டங்களில் உள்ள கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு செல்கிறார்.
இந்த பயணத்தில் பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். அதனுடன் உலகளாவிய தெற்கு பகுதியில் பல்வேறு முக்கிய நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவை விரிவாக்கம் செய்யும் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுகிறார்.
பிரதமர் 5 நாடுகளுக்கு செல்வது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டில் அமெரிக்கா, மெக்சிகோ, சுவிட்சர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய 5 நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதன்படி, கானாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா பிரதமர் ஒருவரின் கானாவுக்கான முதல் பயணம் இதுவாக அமைகிறது. பிரதமர் மோடிக்கும் கானாவுக்கான முதல் பயணம் இதுவாகும்.
இதைதொடர்ந்து, டிரினிடாட் அண்டு டுபாகோ நாட்டுக்கு 2 நாட்கள் (ஜூலை 3 மற்றும் 4) சுற்றுப்பயணம் செய்கிறார். அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து, அர்ஜென்டினாவில் 2 நாட்கள் (ஜூலை 4 மற்றும் 5) சுற்றுப்பயணம் செய்வார்.
இதன்பின்னர், 3 நாட்கள் (ஜூலை 5 முதல் 8 வரை) பிரேசிலில் பயணம் மேற்கொள்வார். அந்நாட்டு ஜனாதிபதி லுலா டா சில்வா அழைப்பின் பேரில் செல்லும் பிரதமர், அந்நாட்டில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். இதில், அமைதி மற்றும் பாதுகாப்பு, பன்முகத்தரப்பு உறவை வலுப்படுத்துதல், பொறுப்புடனான ஏ.ஐ. தொழில் நுட்ப பயன்பாடு, பருவநிலை மாற்ற செயல்பாடு, உலகளாவிய சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் நிதி சார்ந்த விவகாரங்களில் இந்தியாவின் பார்வைகளை அவர் பகிர்ந்து கொள்கிறார்.
இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பல்வேறு இருதரப்பு கூட்டங்களையும் அவர் நடத்துவார். இறுதியாக பிரேசிலில் இருந்து நமீபியாவுக்கு அவர் செல்கிறார். அப்போது, அந்நாட்டு ஜனாதிபதி நந்தி தைத்வாவை சந்தித்து இருதரப்பு உறவுகளை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார். நமீபியாவின் நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் எட்டு நாள் சுற்றுப்பயணம் ஜூலை 9ம் தேதி அன்று முடிவடைகிறது.