அஜித்குமார் வழக்கு: டிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
1 min read
Ajith Kumar murder: State Human Rights Commission issues notice to DGP
3.7.2025
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித்குமார் (வயது 27). இந்தநிலையில் நகைத்திருட்டு வழக்கு தொடர்பாக, அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார், அவரை கடுமையாக தாக்கினர். இதில் மயங்கி விழுந்து அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இதில் தொடர்புடையதாக கூறப்படும் தனிப்படை போலீஸ்காரர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர்.
மேலும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஆஷிஸ்ராவத் இடமாற்றம் செய்யப்பட்டு, கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அஜித்குமார் மரண வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, போலீசாருக்கு சரமாரி கேள்விகளை கேட்டு, கடும் கண்டனத்தையும் பதிவு செய்தது.இதனிடையே இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். போலீசாரின் அத்துமீறிய தாக்குதலே இந்த மரணத்துக்கு காரணம் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.
தமிழகம் மட்டும் இன்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. நாளிதழ் செய்தி அடிப்படையில் விசாரணையை எடுத்த மனித உரிமை ஆணையம், தமிழக டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.