எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்: பாஜகவினருக்கு அழைப்பு
1 min read
Edappadi Palaniswami tour: Invitation to BJP members
3.7.2025
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் அரியணையில் ஏறும் முனைப்பில் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது.
அதன் ஒரு பகுதியாக அதிமுக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள் இருக்கிறார். இந்த சுற்றுப்பயணத்தில் அவர் தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களை சந்திக்கிறார்.
தனது முதற்கட்ட சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி வருகிற 7-ந்தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதியில் இருந்து தொடங்குகிறார். அன்று மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிகளிலும், மறுநாள் 8-ந் தேதி கோவை தெற்கு, வடக்கு தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்கிறார்.
அதைத்தொடர்ந்து வரும் நாட்களில் ஒரே நாளில் 3 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதற்கட்ட சுற்றுப்பயணத்தை வருகிற 23-ந்தேதி ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி நிறைவு செய்கிறார். இந்த பயணத்தின்போது அந்தந்த தொகுதிகளில் உள்ள மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயண தொடக்க விழாவில் பங்கேற்க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் இந்த அழைப்பை ஏற்று வருகிற 7-ந்தேதி மேட்டுப்பாளையத்தில் தொடங்கும் எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயண தொடக்க விழாவில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் பாஜகவினர் பங்கேற்க உள்ளனர்.
இதுதவிர எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் அதிமுகவினர் மட்டுமின்றி, அந்த பகுதியை சேர்ந்த பாஜக தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.