நிகிதா மீது துறை நடவடிக்கை: கல்லூரி கல்வி அதிகாரிகள் திட்டம்
1 min read
Departmental action against Nikita: College Education Officers plan
4.7.2025
நகை திருட்டு புகார் கூறிய நிகிதா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகாரளித்த பேராசிரியை நிகிதா தற்போது திண்டுக்கல்லில் உள்ள எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தாவரவியல் துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார்.
இங்கு மாணவிகளை தகாத முறையில் நடத்தியது, வருகை பதிவேடு உள்ளிட்ட அலுவல் பணிகளை முறையாக மேற்கொள்ளாதது, சக பேராசிரியர்களை தரக்குறைவாக பேசியது, கல்லூரி முதல்வருக்கு கட்டுப்படாதது போன்ற பல்வேறு அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையில் நிகிதாவை இடமாற்றம் செய்யுமாறு அவரது துறையின் மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு மே மாதம் இந்த விவகாரம் குறித்து விசாரித்து நிகிதா மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் மூலம் மதுரையில் உள்ள கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு அறிவுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதம் தொடர்பாக விசாரணை நடத்திய கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் நிகிதா மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை உறுதி செய்து அது தொடர்பாக விரிவான அறிக்கையை கல்லூரிக்கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கை மீது இது வரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தற்போது நிகிதா மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வாங்கி நிகிதா ஏமாற்றி உள்ளார். இது தொடர்பாக அவர் மீது மோசடி குற்றச்சாட்டுக்கள் உள்ளன. கடந்த 2011ம் ஆண்டு ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக மதுரை திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் நிகிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் கல்லுாரிக்கல்வி அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.