நெல்லை, தென்காசியில் வீடுகளில் சோலார் பேனல் அமைக்க 7-ந் தேதி சிறப்பு முகாம்
1 min read
Special camp on the 7th to install solar panels in houses in Nellai and Tenkasi
4/7/2025
திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளின் மேற்கூரைகளின் மேற்பரப்பில் சோலார் பேனல்கள் நிறுவி மின் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு, விண்ணப்பிக்கும் முறை, வங்கி கடன் உதவி, வீடுகளில் மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி செய்வதற்கு அரசின் மானியங்கள், சோலார் பேனல் மின் உற்பத்தியால் கிடைக்கும் பயன்கள் பற்றிய விரிவான தகவல்களை பெறும் வகையில், தமிழக அரசால் அங்கீகாரம் பெற்ற சோலார் பேனல் நிறுவும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், மின்வாரிய அலுவலர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலில் வரும் 7.7.2025 திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாம் தியாகராஜநகரில் உள்ள திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம், கே.டி.சி.நகரில் உள்ள திருநெல்வேலி நகர்புறக் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய ஊர்களில் உள்ள செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. எனவே நெல்லை, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.