இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவக் கல்வி ஊழல்- சாமியார், அரசு அதிகாரிகள் உட்பட 34 பேருக்கு வலைவீ்ச்சு
1 min read
India’s biggest medical education scam – 34 people including priests, government officials nabbed
6.7.2025
இந்தியாவின் மிகப் பெரிய மருத்துவக் கல்வி ஊழல் ஒன்றை சிபிஐ வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
இந்த மோசடியில், புகழ்பெற்ற சாமியார் ரவி சங்கர் மகராஜ், முன்னாள் கல்வித் தலைவர் டி.பி. சிங் மற்றும் அரசு சுகாதாரத் துறை அதிகாரிகள் உட்பட 34 சக்திவாய்ந்த நபர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்க இவர்கள் பெரும் தொகை லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
சாமியார் ரவி சங்கர் அறக்கட்டளையால் நடத்தப்படும் ஒரு கல்லூரிக்கு சாதகமான ஆய்வு அறிக்கையை வழங்குவதற்காக ரூ.55 லட்சம் வாங்கிய மூன்று மருத்துவர்களை சிபிஐ கைது செய்ததில் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
தகவல்களின்படி, இந்த மோசடியின் மையம் மத்திய சுகாதார அமைச்சகத்திலேயே இருந்திருக்கிறது. அங்கிருந்த எட்டு அதிகாரிகள் ரகசிய கோப்புகளைப் புகைப்படம் எடுத்து, ஆய்வு தேதிகள் மற்றும் அதிகாரிகள் பெயர்களை கல்லூரி நிர்வாகங்களுக்கு பெரும் லஞ்சம் பெற்று கசியவிட்டுள்ளனர்.
உதாரணத்திற்கு, ஒரு பல்கலைக்கழக பதிவாளர் மயூரி ராவல், ரகசிய ஆய்வு விவரங்களைப் பகிர்ந்து கொள்ள ரூ.25-30 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இதேபோன்று இந்த மோசடி சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் நடந்துள்ளது.
கல்லூரிகள், ஆய்வாளர்களை ஏமாற்ற போலி ஆசிரியர்களை நியமித்தல், போலி பயோமெட்ரிக் வருகைப் பதிவேடுகளை உருவாக்குதல், போலி நோயாளிகளைக் காட்டுதல் போன்ற தந்திரங்களைப் பயன்படுத்தியுள்ளன.
இந்தூரில் உள்ள இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரியில் போலி கைரேகை வருகைக்கு ரப்பர் விரல்கள் பயன்படுத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது.
லஞ்சப் பணம் ஹவாலா நெட்வொர்க்குகள் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு அதிகாரி பெற்ற லஞ்சப் பணத்தின் ஒரு பகுதி ராஜஸ்தானில் ரூ.75 லட்சம் மதிப்பில் அனுமான் கோயில் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது .
இது இந்தியாவின் மிக மோசமான மருத்துவக் கல்வி ஊழல்களில் ஒன்று என்று சிபிஐ தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன.
இதுவரை 3 மருத்துவர்கள் மற்றும் ஒரு கல்லூரி இயக்குனர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.