பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை: தலைமை செயலாளர் எச்சரிக்கை
1 min read
Chief Secretary warns of disciplinary action if government employees participate in general strike
8.7.2025
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை (புதன்கிழமை) பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன.மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.
தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்பார்கள் என்று தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளை நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் சம்பள பிடித்தம் மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.