குடமுழுக்கில் செல்வபெருந்தகைக்கு அவமரியாதை- மார்க்சிஸ்ட்டு கண்டனம்
1 min read
Disrespect to Selva Perundakai in Kudamuzhu – Marxist condemnation
8.7.2025
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர், வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. திருப்பெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவருமான கு.செல்வப்பெருந்தகை விழாவில் பங்கேற்க வந்துள்ளார்.
ஆனால், அங்கு பணியில் இருந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அவரை சமூக ரீதியான உணர்வுடன் பாகுபாட்டுடன் நடத்தியுள்ளனர். ஆகம விதிகள் என்ற பெயரில் ஒரு சட்டமன்ற உறுப்பினரையே அவமரியாதையாக நடத்தியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இதே நிகழ்வில் பங்கேற்ற வேறு சில கட்சிகளின் தலைவர்களுக்கு அனைத்து விதமான மரியாதைகளும் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான கு. செல்வப்பெருந்தகைக்கு உரிய மரியாதை அளிக்கப்படாதது ஏன் என்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்கள் முன் பதில் அளித்திட வேண்டும்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் உடனடியாக உரிய விசாரணைகள் நடத்தி இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கோவில் விமான கலசம் புனித நீர் ஊற்றும் பகுதிக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் முன்கூட்டியே சென்றுவிட்டார் என்றும் தாமதமாக வந்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை, காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
கும்பாபிஷேக விழா முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-
குடமுழுக்கு விழா சிறப்பாக நடந்தது. அதிகாரிகளைப் பொறுத்தவரை மிகவும் மெத்தன போக்கை கடைபிடித்து வருகின்றனர். யார் யாரை கட்டுப்படுத்துவது என்பதே தெரியவில்லை. பாதுகாப்பில்லாத நிலையில் தான் குடமுழுக்கு விழா நடந்து முடிந்துள்ளது.
இதனை மிகவும் செம்மைப்படுத்தி செய்திருக்கலாம். 2000 ஆண்டுகளாக இந்த பிரச்சனை இருந்து வருகிறது. அதிகாரிகள் முன் நின்று செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆகையால் மக்களோடு மக்களாக விழாவில் பங்கேற்று பார்த்து விட்டு வந்துள்ளேன். திமுக அரசுக்கும், அறநிலையத்துறைக்கும் கலங்கம் ஏற்படுத்தக் கூடாது என்பதால்தான் மக்களோடு மக்களாக பங்கேற்று இருந்தேன்.
அதிகாரிகள், அதிகாரிகளாக செயல்பட வேண்டும். தமிழிசை சௌந்தரராஜனுக்கு கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றும் பகுதிக்கு அனுமதி அளித்ததை அதிகாரிகளிடம் தான் கேட்க வேண்டும், எனக்கு தெரியவில்லை. ஒருவேளை தெலுங்கானா முன்னாள் ஆளுநருக்கு மரியாதை அளிக்க வேண்டும், சட்டமன்ற உறுப்பினரை பின்னாடி நிற்க வைக்கலாம் என அதிகாரிகள் எண்ணினார்களா?
இவ்வாறு சிரிப்புடன் கூறினார்.
கோவில் கும்பாபிஷேக விழாவில் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக செல்வப்பெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கும் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் கட்சிக் கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவரே இவ்வாறு குற்றச்சாட்டு முன் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. செல்வப்பெருந்தகை அப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.