மக்கள்தொகை கணக்கெடுப்பில் பொதுமக்களே தங்கள் பெயரை சேர்க்கும் வசதி
1 min read
Facility for the public to include their names in the census
8.7.2025
நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒருதடவை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்து வந்தது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2021-ம் ஆண்டு நடக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து, மக்கள்தொகை கணக்கெடுப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 16-ந்தேதி, அரசிதழிலும் இது வெளியிடப்பட்டது.
அதன்படி, இரு கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வீடுகளை கணக்கெடுக்கும்பணி, 2026-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி தொடங்குகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி, 2027-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி தொடங்குகிறது. அத்துடன், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும்.
முதல்முறையாக டிஜிட்டல் கணக்கெடுப்பாக இது நடத்தப்படுகிறது. மேலும், முதல்முறையாக பொதுமக்களே தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம்.
அதற்காக, ஒரு தனியான இணையதளம் தொடங்கப்படுகிறது. 2 கட்ட கணக்கெடுப்பிலும் அந்த இணையதளம் செயல்படும். அதில், பொதுமக்கள் தங்கள் பெயர்களை சேர்க்கலாம்.
மேலும், மக்கள்தொகை கணக்கெடுப்பாளர்கள் தங்களது ஆண்ட்ராய்டு, ஆப்பிள் செல்போன்களில் செல்போன் செயலிகளை பயன்படுத்தி, பொதுமக்களின் தரவுகளை திரட்டுவார்கள். அந்த தரவுகள், மின்னணு ரீதியாக மத்திய சர்வருக்கு அனுப்பப்படும். அதன்மூலம் விரைவிலேயே மக்கள்தொகை விவரங்கள் கிடைத்துவிடும். தரவுகள் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு, இந்தியாவின் 16-வது கணக்கெடுப்பு ஆகும். சுதந்திரம் பெற்ற பிறகு எடுக்கப்படும் 8-வது கணக்கெடுப்பு ஆகும். இப்பணியில், சுமார் 34 லட்சம் கணக்கெடுப்பு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஆங்கிலம், இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் செல்போன் செயலிகள் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. செயலியில் பதிவு செய்யப்படும் விவரங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணைய சர்வருக்கு நேரடியாக அனுப்பப்படும். மக்கள் தொகை விவரங்களை பெற முதல்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.