அரசு தந்த இழப்பீட்டில் திருப்தி இல்லை: அஜித்தின் சகோதரர் நவீன் பேட்டி
1 min read
Not satisfied with the compensation given by the government: Interview with Thiruppuvanam Ajith’s brother Naveen
8.7.2025
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் காரில் வைக்கப்பட்டிருந்த நகையை திருடியதாக அந்தப் பகுதியில் உள்ள கோயிலில் பாதுகாவலராக பணி புரிந்து வந்த அஜித்குமார் என்ற இளைஞரை போலீசார் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இந்த சம்பவத்தை அடுத்து, ஐந்து காவலர்கள் பணியிட நீக்கம் செய்யப்பட்டதோடு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், அந்த மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து, டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமாரின் சகோதரர் நவீன் குமாருக்கு தமிழக அரசு சார்பில் ஆவின் நிறுவனத்தில் அரசுப் பணி வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு 3 சென்ட் இலவச வீட்டு மனையும் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், அஜித்குமார் காவல் நிலைய மரண வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இதற்காக நீதிமன்றத்துக்கு வந்திருந்த நவீன் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு சார்பில் எனக்கு ஆவின் நிறுவனத்தில் வழங்கப்பட்ட வேலை மற்றும் வீட்டுமனை பட்டாவில் திருப்தி இல்லை. ஏனென்றால் நான் இருக்கும் திருப்புவனத்தில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் அரசுப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், எனக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை வளர்ச்சி அடையாத பகுதியில் தண்ணீர் இல்லாத காட்டுப்பகுதியில் பட்டால் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மதுரையில் ஏதேனும் அரசுத் துறையில் எனக்கு பணி வழங்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஆனால், தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை.
சாட்சியங்களுக்கும் நிறைய மிரட்டல் வருவதாக சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கும் நீதிமன்றம் பாதுகாப்பு கொடுக்க சொல்லியிருக்கிறது. எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். எனது சகோதரர் அஜித்குமார் ரொம்ப சித்ரவதை பட்டு இறந்துள்ளார்”